உக்ரைனை முந்தியது இலங்கை!!

 


உக்ரைன் போர் இன்னும் சர்வதேச தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தலாம் எனினும், போர்க்களத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நாடான இலங்கையின் நெருக்கடி நிலை இன்று முக்கிய செய்தியாக மாறியுள்ளது என ‘த வொஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.

“பல மாதங்களாக, இலங்கை பொருளாதார மரணச் சுழலில் உள்ளது. கடன் நெருக்கடி, முதலில் தொற்றுநோய்களின் அதிகரிப்பு மற்றும் பின்னர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் நிலை தீவிரமடைந்துள்ளதுடன் உணவு, எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்துகள் ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் த வொஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பில், இலங்கையில் 70 சதவீத குடும்பங்கள் உணவு நுகர்வை குறைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. உணவு விலை பணவீக்கம் சுமார் 57 சதவீதமாக உள்ளது. பெருகிவரும் பொதுமக்களின் கோபம் மற்றும் எதிர்ப்புக்கள் கடந்த மே மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை வீழ்த்தியது, எனினும், நெருக்கடி நிலைமைகள் நீடித்தன.

அத்துடன் பாதுகாப்புப் படையினருக்கும் சாதாரண, கோபமடைந்த பொதுமக்களுக்கும் இடையில் புதிய மோதல்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய அச்சங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தது வாரம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. கடந்த வாரம், தலைநகர் கொழும்பில் வைத்தியர்கள், வைத்திய ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வங்கியாளர்கள் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான பெற்றோல் அல்லது டீசலைப் பெற்றுக்கொள்ள இயலாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அதேவேளை சுதந்திர நாடான பின்னர் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மே மாதம் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இந்நிலையில் புத்திசாலித்தனமான மூத்த அரசியல்வாதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கம் , பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து உதவி கோருவது உட்பட நாட்டைப் பிரச்சனைகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றது.

எனினும், இறக்குமதிக்குப் பணம் செலுத்த முடியாத பாதை இருண்டதாகவே உள்ள நிலையில் இலங்கையில் கடவுச்சீட்டு அலுவலகங்களில் வரிசைகள் இப்போது நீளமாக உள்ளன. மிகவும் அவநம்பிக்கையானவர்கள் இந்தியா போன்ற அருகிலுள்ள நாடுகளுக்கு படகு வழியாக தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கைப் பொருளாதாரத்தின் அழிவை ஆய்வாளர்கள், 1990களின் பிற்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியப் பொருளாதாரங்களில் ஏற்பட்ட நிதிக் குழப்பத்துடன் ஒப்பிட்டுள்ளனர். அதோடு தெற்காசியாவின் லெபனானாகக் கடனில் சிக்கி, செயலிழந்த நாடாக, இலங்கை மாறும் என்றும் ஏனையவர்கள் எச்சரிக்கின்றனர்.

நாட்டின் இடைக்கால அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு சாத்தியமான நிதியளிப்பு தொடர்பாக கடந்த ஜூன் 20 அன்று ஆரம்பித்த பத்து நாள் பேச்சுகள் எந்தத் தீர்மானமும் இல்லாமல் கடந்த வாரம் முடிவடைந்தனதாகவும் ‘த வொஷிங்டன் போஸ்ட்’ குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.