உயிர் போக்கும் எரி குண்டு!!


 இந்த எல்லை இல்லா

பெருவெளியில்
நிழலாகத் தொடர்ந்த உன்னை
தொலைத்துவிட்டுத் தேடுதலென்பது
தீராத தாகம்
இவ்வுலகை நீ
விட்டுச் சென்ற
நாளில்
வானத்தில் நட்சத்திரங்கள்
தோன்றவில்லை
நறுமண மலர்கள் பூக்கவில்லை
காற்றும் மௌனமாகவே
கடந்து சென்றது
போர்க்கோலம் சூழ்ந்திருந்த
பொழுதொன்றில்
காயத்தால் உனது உதிரம்
மண்ணில் சிந்தியபோதும்
சினம்கொண்ட வேங்கையாய்தான்
நின்றிருந்தாய்
பின்பொரு நாளில்
உயிர் போக்கும் எரி குண்டு
என்னுடலைப்
பதம் பார்த்துச் சென்றபோது
கண்ணீர் சிந்தியபடி
நீ எனக்காய்
வரைந்த மடல்களில்
கண்ணீர்த் துளிகளைக் கண்டேனே
அப்போதெல்லாம்
உரிமையோடு
உன் கரம் கோர்த்து நான்
நடந்திருக்க வேண்டும்
உந்தன் தழும்புகளிற்கு
ஆறுதலாய்
இருந்திருக்க வேண்டும்
வசந்தம் சூழ்ந்திருந்த மனதில்
நீ இல்லாமல் போகும்
இந்நாள்போல் ஓர் நாள்
வருமென்று
நான் நினைத்திருக்கவில்லையே
இப்போதெல்லாம்
சாளரம் வழி உள்நுழைந்துகொள்ளும்
காற்றோடும்
உன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன்
நீ உன்னதம் கொண்ட
உயிர்த்தியாகி என்பதால்தானோ
எனதிந்த
தேடல்களில்
யாதுமானவனாய் நீயே
நிறைந்துவிட்டாய்.....
💕பிரபாஅன்பு💕

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.