ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு!
இடதுசாரிக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான ஒஸ்லேம் டெமிரேல் (Özlem Demirel) அவர்களை கடந்த வாரம் düsseldorf நகரத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையில் அங்கம் வகிக்கும் யெர்மனி செயற்பாட்டாளர்கள் மூவர் கொண்ட குழு சந்தித்து அவருடன் இலங்கையின் இன்றைய அரசியல் நிலை பற்றி விளக்கியிருந்தார்கள்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பற்றிய அறிமுகத்துடன் தொடங்கிய கூட்டம் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்றது. ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வு விடயத்தில் யெர்மனியும் ஐரோப்பி ஒன்றியமும் ஆதரவு வழங்கவேண்டும் என வலியுறுத்துப்பட்டது.
2009ல் ஈழத்தமிழருக்கு நடைபெற்ற இனவழிப்பு பற்றியும் தற்பொழுது நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு பற்றியும் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. சிங்கள அரசால் தற்சமயம் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புகள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள், கலாச்சாரச் சிதைவுகள், திட்டமிட்டு இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவித்தல் போன்ற விடயங்களை அவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஒற்றையாட்சி யாப்பின் பாதிப்புகள் பற்றியும் ஒற்றையாட்சி முறைமையே தமிழ்மக்களின் இன்றைய நிலைக்குக் காரணம் என்பது சம்பந்தமான விடயங்களும், இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சரிவிற்கு ஒற்றையாட்சியும் ஒரு முக்கியமான காரணம் என்பதையும் எடுத்துரைக்கப்பட்டது. நிபந்தனைகள் (இனப்பிரச்சனைக்கு தீர்வு) இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கக்கூடாது என்று கோரிக்கைவிடப்பட்டது.
எல்லா விடயங்களையும் பொறுமையாகக் கேட்டறிந்த அம்மையார் முதற் கட்டமாக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக்கட்சியின் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் சந்திப்புகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.
சந்திப்பின் முடிவில் 'ஈழத்தமிழர் தொடரும் போராட்டம்' என்னும் நூல் ஒன்றும் அம்மையாரிடம் கையளிக்கப்பட்டது. யேர்மன் மொழியில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இன அழிப்பு, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்கள் போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கமாகக் காவி நிற்கிறது.
சவால்கள் நிறைந்த 2023ம் ஆண்டில் பல அரசியல் சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். ஆகவே இனிவரும் காலங்களில் மேலும் பல இராசதந்திர நடவடிக்கைகளை பல முனைகளிலும் மேற்கொண்டு தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை முடிவெடுத்துள்ளது.
-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
கருத்துகள் இல்லை