பலம் மீட்கும் நிலம்...!


பலவீனமானவர் எப்போதும்

தடைக்கல்!

பலமானவர் எப்போதும்

படிக்கல்!


விடுதலை என்பது

விழிதொடும் தூரமல்ல

புயலிடை வீழ்ந்த படகாய்

அழிவுகளை கடந்து வலிகளை சுமந்து வலிமையில் நிமிர்ந்து ஏறும்

அலைகடல் ஆழம்!


நீச்சல் மட்டும் போதாது

கொடும் அலைகளை கடந்து போக திடமான

நெஞ்சுரம் வேண்டும்!


படகும் துடுப்பும் இருக்கையில்

படபடப்பின்றி பக்குவமாய்

பயணம் செய்தோம்

எந்த வலியும் இருக்கவில்லை!


இப்போது அப்படியல்ல

நீச்சல் அடித்துத்தான்

இலக்கை எட்ட வேண்டும்

அலையோடு மோதிவரும்

அலம்பலையும் எதிர்க்கவேண்டும்!


செத்துப்போன மீன்களோடு

சேர்ந்தும் போகவேண்டும்!


ஆனாலும்

எந்த புத்துக்குள் இருந்து

என்ன பாம்பு வரும்மென

யாருக்கும் தெரியாது!


தலைவன் சொன்னதுபோல்

சின்ன பாம்பாக இருந்தாலும் 

பெரிய தடியால் அடி!


தனித்தவில் வாசிப்பதால் மகிழ்ச்சி மலராது!

வறண்டு போன பூமியில் வசந்தம் துளிராது!


ஒற்றுமையெனும் நேர்கோட்டில் 

ஒருவன் விலத்தி நின்றாலும்

ஒற்றனுக்கே வாழ்வு!


சிற்றெறும்பே

புற்றேடுத்து

ஒற்றுமையாய்

ஓர்மையில்

கூர்மையாய்

இருக்கையில்

கொன்று குவித்தவனோடு

குலாவித்திரியாது

வென்று முடிப்பதற்கு

ஊன்று கோலாய்

இருந்து பாரு

மூன்று தமிழும்

முடி சூடும் காலம்

ஆளும் இனத்தை

வென்று வாழும்!


✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.