ஈழமே அழுத சோக நாள். 02.11.2007


வழமைக்கு மாறாக அன்று இரவிரவாக வேவு விமானம் தன் வேலையைத் தொடங்கியது. எங்களுக்குக் கிட்டத்தான் எங்கையோ அடிவிழப்போகுது என்பதை நாங்கள் ஓரளவு ஊகித்துக்கொண்டோம். .அதனால், இரவு வெளிச்சங்களை நிறுத்திவிட்டு ஒருவரோடு ஒருவர் இடிபட்டவாறே இரவுக் கடமைகளில் ஈடுபட்டோம்.


' பிறேம், ரோன் றேஸ் பண்ணிச் சுத்துற பாக்க வித்தியாசமா இருக்கடி. எங்களுக்குதான் அடிவிழப்போகுதோ தெரியல ' என்று சுடர்நிலா சொன்னது எனக்கு நகைச்சுவையாக இருந்தது. 'அப்படி இஞ்ச அடிவிழுந்தாலும் நாங்க செத்தாலும் நீமட்டும் தப்புவா கவலைப்படாத..' என்று சிரிச்சுப்போட்டு அன்றாட காலை வேலைகளைச் செய்யத் தொடங்க முன்னரே 'கிபிர்' வரப்போகுது என்பதற்கான சைகை அயல் தங்ககத்தில் இருந்து வந்ததும் பலர் பாதுகாப்பை எடுத்துவிடடோம். கிபிரைவிட நண்பி 'தமிழ்நங்கை' வேகமா ஓடிவந்து பதுங்கு குழிக்குள் எங்களுக்கு மேல விழுந்ததே குண்டு விழுந்தமாதிரி உணர்வு. 


சைகை வந்து 3 நிமிசத்துக்குள்ளே கிபிர்வந்து அந்த துன்பியல் சம்பவம் நடந்துவிட்டது. . கிபிரைவிட அது கோர்வாயாகக் கழட்டிய குண்டுகளைக் கண்டதும் பேரதிர்ச்சியைக் கொடுத்தன. குண்டின் அதிர்வுக்கு எங்கட பதுங்குகுழி குலுங்கி மண், கல் ,மரங்கள் எல்லாம் எங்களுக்கு மேல் கொட்டத்தொடங்கின. ஒவ்வொரு குண்டும் வெடித்தபிறகுதான் நாங்க தப்பிவிட்டோம் என்று ஆறுதலடைய முடிந்தது. ஆனால், 

அத்தனை குண்டிலும் பக்கத்தில் தமிழ்ச்செல்வன் அண்ணையையும் உடனிருந்த போராளிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை அறியவில்லை. 


குண்டு விழுந்த இடமும் நாங்கள் இருந்ததும் ஏறக்குறைய ஒரு கிலோமீற்றர் தூர இடைவெளிவரும். கிளிநோச்சி 155 ஆம் கட்டை தன் அழகு இழந்து சுடலைமயமானது ஈழமெங்கும் சோக மயமானது.அன்றே அந்த புன்சிரிப்பும் ஊன்றுகோலும் தன் இருப்பை இழந்தன. 


அன்றைய சம்பவத்தில் உடனிருந்த

சுடர்நிலா உட்பட பல தோழர்கள் இன்றைய நினைவு மீட்டலில் உயிருடன் இல்லை. 

எதிரியின் கொடூரங்களைவிட எங்களுக்குள்ளே பல துரோகங்கள் வாழ்ந்தன என்பதுதான் கவலை.


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.