வில்லம்பு _நான் புல்லாக மாறும் கணமே என் !


இனிமேல் எதுவும் மிஞ்சப்போவதில்லை எனும்படி இங்கு நீண்ட வறட்சி பல நாட்கள் நிலவியது. புற்களின் மடல்கள் கருகி பாலைத் தோற்றம் காட்டி வெறுமை எஞ்சியது. அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளம் என ஆரவாரம் காட்ட இந்த ஊரின் பூமி அவிந்து பொருக்காயிற்று. புயல் வரும் என்ற தினச்செய்தி பொய்த்துப் போகும் என்றிருக்க, வான் கனிந்து வழங்கத் தொடங்கி ஒரு கிழமைக்கு மேல் ஆகிறது. 


முதல் மழையின் ஒரு இரவுக்குள் பச்சையம் பூசிய புல் மடல்கள் மண் பிளந்து வான் நோக்கி மேலெழுந்து வந்தன. வேரின் தவம் முதிர்ந்து விண்ணை உள் நிறைத்து வெளிப்படுத்தியது. 


முழுமையாகப் புதுத் தோற்றம் காட்டி பச்சை விரித்த மண். சரசரவெனப் புற்கள் வளர்ந்து நீண்டு நிற்கின்றன. 


கிழக்குப் பக்கம் சூரியக் கதிர்களின் தாக்கம் குறைப்பதற்காக சாளரங்களின் வெளியே வைத்த கரும்பு உயர்ந்த புதர்க் காடாயிற்று. முதிர்ந்த தடிகளை வெட்டி அகற்றிக் குறைத்தாகி விட்டது. ஆனால் புல் வெட்ட நேரம் அமையவில்லை. வேலையும் உடலும் ஒத்துழைத்த போது நிலம் தினமும் ஈரம் உறிஞ்சி மிகுதி தேக்கி மறுக்கிறது. அயல் வீடுகள் மழைக்கு முன்னரே வெட்டி சீரமைத்து விட, நான் வெட்கப்பட்டு நிற்கிறேன்.


புல்லை எவர் வெல்ல முடியும்? மண்ணில் தோன்றிய முதல் உயிரி புல்லாகத்தான் இருக்க முடியும். பின்பே அடுத்த நில உயிரின் தோற்றம் அமைந்திருக்கும். அதன் உணவின் ஆதாரம் புல். அல்லது அழிந்திருக்கும். புல் அன்னை. வைராக்கியம் மிக்க பெருந்தேவி. எவ்வளவு அழித்தாலும், எந்தளவு வான் பொய்த்தாலும் ஆயிரம் வேர்கள் பரப்பி மண்ணடியில் அமைதியாகத் தவமியற்றிக் காலம் கனிந்தவுடன் உச்ச வேகம் காட்டி உயிர்த்தெழும் அதிசயம். பெருந்தவம், பின்னர் ஒரே குறிக்கோள். ஆனால் அழியாதது. ஆரவாரமில்லாதது. மண்ணின் ஆதாரமானது. 

மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குப் பல்வேறு உதாரணங்கள், மேற்கோள்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. என்னைக் கேட்டால் புல் போன்று இருக்க வேண்டும் என்பேன்.


'தாவரங்களை உணர, புரிந்துகொள்ள அமைதியான உயிரினங்களால்தான் முடியும். மனிதனாய் உட்கார்ந்து பூமியைக் காண்கிற போது பூமியின் மீது சிநேகத்தை விட ஆளுமை உணர்ச்சியே அதிகம் இருக்கிறது. இந்த ஆளுமை எண்ணங்கள் மனிதன் நெட்டுக் குத்தலாய் வளர்ந்து விட்டதனால்தான். பூமியைப் பார்க்காமல் கண்கள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்ததில் பூமி புரியாது போய்விட்டது. பூமியில் தோன்றியவையும் புரியாது போய்விட்டன. மனிதர்கள் உணரத் தவிக்கின்ற ஏகாக்கிரஹத்தை புற்கள் மிகச் சுலபமாகக் கைக்கொண்டன. புல் என்கிற உடலிலிருந்து பார்க்கும் போது வானத்தின் அசைவுகள் மொத்தமும் தெரிகின்றன. இடைவிடாது நீர் உருகி தன்னுள் உறிஞ்சி நிரப்பிக் கொண்டு வெயிலை உறிஞ்சி தன்னைச் சூடுபடுத்திக் கொண்டு தடிமனாய் சுவையாய் வளர்வது. மழையில் நனைகிற எல்லாப் புற்களும் ஒரு தவ நிலையில் இருக்கின்றன.' இதனை பாலகுமாரன் 'திருப்பூந்துருத்தி' நாவலில் குறிபிட்டிருப்பார்.


மரங்களின் கிளைகளில் ஆடும் பலவகைப் பறவைகளை ஓரளவாவது பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறோம். புற்களைக் கவசமாகக் கொண்டு மண்ணில் வாழும் எண்ணிலடங்கா ஊர்வனவற்றை, பூச்சியினங்களை, புழுக்களை ஆர்வத்துடன் நோக்கியதுண்டா? அல்லது புல்லைக் கூர்ந்து நோக்கி அதுவாக உளம் குவித்ததுண்டா? பாலகுமாரன் சொல்லியது போல் பூமியைக் குனிந்து நோக்கினால் அனேக அதிசயம் அகப்படும்.


துரோணர், பரத்வாஜ முனிவருக்கும் குகர் இனத்தில் தர்ப்பைப் புல் முடையும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர். தந்தையைத் தேடி அடைந்த போது தந்தையால் குலம் வழங்கப்படாது அவமானமும் வேதனையும் அளிக்கப்பட்டவர். இளமையில் அதீத அவமானங்கள் சுமந்தவர். குசை எனப்படுகிற தர்ப்பைப் புற்களின் பரப்பில் படுக்கும் போது அன்னை மடியென நிம்மதி காண்பார். தர்ப்பைப் புல்லை அம்பாக அடிக்கும் வித்தையில் நிகரற்றவராகத் துரோணர் குறிப்பிடப்படுகிறார்.


அக்னிவேசர் குருகுலத்தில் மாணாக்கனாக இருந்த போது, 'வில் என்றால் என்ன?' என்ற ஆசிரியரின் கேள்விக்கு துரோணன் அளித்த பதில் 'வில் என்றால் புல்'.

அக்னிவேசர் இந்தப் பதிலைத் தன் அந்திம நேரத்திலேயே முற்றிலும் புரிந்துகொண்டதாக துரோணனிடம் கூறுவார். வில் என்பது ஒரு புல் மட்டுமே என்றும் தனுர்வேதமென்பது புல்லை அறிந்துகொள்ளும் ஞானம் என்றும் அறிந்துகொண்டதைப் பரவசத்துடன் குறிப்பிடுவார்.


பின்னாளில் துரோணர் அர்ஜுனனுக்குக் கற்பிப்பது: 

"வில் எனும் அறிவை வகுத்துரைப்பது கல்பம். ஒரு அம்பில் விரையும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? காற்றில் எழுந்து மண்ணை உண்டு வளரும் மூங்கிலில் இருந்தது அது. அதன் நாணாக இறுகிய தோலை அளித்த எருமை பல்லாயிரம்கோடி புல்லிதழ்களில் இருந்து அதை உருவாக்கிக் கொண்டது. காற்றில் மிதக்கும் அந்த அம்பின் சமநிலையை புல் அசைந்தாடி அசைந்தாடி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மெல்லக் கண்டெடுத்தது. அவ்வறிதல்களை பகுத்தும் தொகுத்தும் அறிய உனக்கு உதவுவதே கல்பம். அவ்வறிதல்களை மந்திரங்களாக்கி அகத்திலுறையச்செய்தனர் முன்னோர்." (வெண்முரசு - வண்ணக்கடல்).


புல் வெட்டும் போதும், மரங்களின் கிளைகளை வெட்டிச் செப்பனிடும் போதும் சிறு குற்றவுணர்வு என்னில் வருகிறது. அர்ஜுன சஞ்சலத்தின் ஒரு பகுதி ஆட்கொள்கிறது. இதுவே அவ்வேலையில் சிறிது சோர்வையும் அளித்து விடுகிறது.


ஒவ்வொரு முறையும் இவற்றுடனான போரில் தோற்றுப் போகிறேன். வெட்டிச் சீரமைத்து எண்ணத்தின் செயற்கை வடிவத் திருப்திக்குக் கொஞ்சம் ஆட்பட்டு நிற்க, இரு வாரத்தில் மீண்டும் தளதளத்து உயரமாய், நெருக்கமாய், உறுதியாய் பச்சைக் கூர்களால் வானளந்து வளரும். 

அளித்து அழிந்து உயிர்த்துத் தழைத்துத் தருக்கி நிற்கும்.


பரசுராமர், அக்னிவேசர், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஏகலைவன், அர்ஜுனன் இவர்களின் ஆயிரமாயிரம் அம்புகளாய் தோற்றம் காட்டும்!


நான் புல்லாக மாறும் கணமே என் தோல்வி முடிவடையும்.

-சுபா சிறி-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.