'கில்மிசா' என்ற படத்தின் கிளைமாக்ஸ்!

 

கில்மிசா என்ற குழந்தை ஒன்றும் உலக சாதனை செய்துவிடவில்லை. இந்திய அளவில் - அவ்வளவு ஏன் தமிழக அளவில் கூட விஜய் தொலைக்காட்சி போன்ற குழந்தைகளுக்கான 'சூப்பர் சிங்கர்' போட்டிகளுடன் ஒப்பிடும் போது அதன் கடை மட்டத்தில் உள்ள 'Zee தமிழ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் - இறுதியில் வெற்றியாளருமானார்.

அவ்வளவுதான். 
இதில் அவரது குடும்பத்தினரும் நலன் விரும்பிகளும் தவிர்ந்து ஒரு இனமே கூட்டாகக் கொண்டாட எதுவுமே இல்லை.
இன்றைய சமூக வலைத் தள யுகத்தில் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட இந்த பிம்பம் இப்போது கலைந்து போயிருக்கிறது.
ஆனாலும் கில்மிசா உலகத் தமிழர் பலரால் நேசிக்கப்படவும் கொண்டாடப்படவும் காரணமாகியது குறிப்பிடத் தகுந்தளவு பார்வையாளர்களைக் கொண்ட ஒரு இந்திய ஊடகத்தில் எமது போராட்ட நியாயத்தையும், பு லி கள் மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுதலித்த ஒரு கோட்பாட்டு நியாயத்தையும் (அவரது அம்மா ஊடாக) முன்வைத்ததுதான்.
இதுதான் 'கில்மிசா' என்ற படத்தின் கிளைமாக்ஸ்.
ஒரு இன அழிப்பைச் சந்தித்து அதற்கு நீதி கேட்டுக் கொண்டிருக்கும் இனத்திற்குத் தேவையான கிளைமாக்சும் இதுதான்.
ஆனால் சிலர் நன்றிக்கடனாக டைட்டில் காட் போடும்வரை படத்தை பார்த்து முடிப்போம் என்பதுபோல் கில்மிசா வெற்றியை 'கிளைமாக்சாக' நினைத்து அதற்காக முக்கியதுதான் இங்கு பிரச்சினையே.
விளைவு இன அழிப்பு அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் இணக்க அரசியல் கும்பலும் இதைத் தமக்குச் சாதகமாக்கி கதையில் வேறு ஒரு 'கிளைமாக்சை' திணித்து விட்டார்கள்.
இதை முன்பே ஊகித்ததனால்தான் எம் போன்றோர் இது போன்ற விளையாட்டுக்களில் எப்போதும் தலையைக் கொடுப்பதில்லை.
நாட்டுக்காகப் போராடியவர்களையே தமக்குள் சிக்கவைத்து நிர்ப்பந்தத்தைக் கொடுத்து தமது இன அழிப்புக்கு வெள்ளையடித்தவர்கள் ஏனையோரைச் சும்மா விட்டு விடுவார்களா?
அதுவும் இது குழந்தை வேறு.
இதனால் தமிழ்த் தேசியத்திற்கு எந்த இழப்புமில்லை. மாறாக இன்னும் வலுச் சேர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
ஒரு பாடகியாக சிறுமியின் எதிர்காலம் என்பது தமிழகத்திலும், புலம்பெயர் தளத்திலுமே தங்கியுள்ளது.
நேற்றைய சம்பவத்தை அடுத்து எனக்குத் தெரிய ஐரோப்பாவிற்கு கில்மிசாவை இசை நிகழ்வுக்கு அழைக்க உத்தேசித்திருந்த ஒரு தரப்பு அதை ரத்துச் செய்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு இசை அமைப்பாளருடன் தொடர்பில் உள்ள ஒருத்தர் கில்மிசாவிற்காக வாய்ப்பு கேட்க இருப்பதாகச் சொன்னவர் அதை நேற்றோடு கைவிட்டு விட்டார்.
இது இனி களம், தமிழகம், புலம் என்று மூன்று தளங்களிலும் நடக்கும். ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் அந்தளவிற்கு தமிழ்த் தேசியம் வலிமையுடனேயே இருக்கிறது.
இன அழிப்பு அரசும் அதன் அடி வருடிகளும் தம்மை வெள்ளையடிக்க 'Killமிசா' என்ற பாடகியை உண்மையிலேயே 'Kill' செய்து விட்டார்கள்.
இனி அவரை கோயில் திருவிழாவிலும், செத்தவீட்டிலும், ஒட்டுக் குழுக்களின் மேடையிலும், சிங்களக் கட்சிகளின் பிரச்சார மேடையிலும் ஒரு ஒரு பின்னணிப் பாடகியாக அல்ல ஒரு மேடைப் 'பாட்டுக்காரியாக' மட்டுமே பார்க்க முடியும்.
கில்மிசா Zee தமிழ் நிகழ்வில் முதல் நாள் கூறியது போல் 'சிறீலங்காப்' பாடகியாக தேய்ந்து அழிந்து போவதுதான் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

இதை அவரது குடும்பம் நினைத்தால் மாற்றியமைக்க முடியும்.
அவர்கள் நினைப்பார்களா? சந்தேகம்தான்..





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.