கலாச்சார அழிவுக்கு வித்திடும் செயல்!
ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடாத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்
இன்று(06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பு போரை முன்னெடுத்து இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை மௌனிக்க செய்த இனவாத ஆட்சியாளர்கள் சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தியும் அபிவிருத்தி எனும் போர்வையிலும் தமிழர் தாயகத்தின் நிலங்களை ஆக்கிரமித்து கொண்டு இனத்துவ அடையாளங்களில் ஒன்றான கலாச்சார மற்றும் பண்பாட்டை அழிக்கும் செயலையும் தீவிர படுத்தியிருக்கும் நிலையில் ஜனாதிபதி இந்தியாவின் பிரபல்ய ஊடகம் ஒன்று நடத்திய பாட்டு போட்டியில் வெற்றியாளருக்கு பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் பொங்கல் விழா எனும் போர்வையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அறிமுகப்படுத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அழிவுக்கு வித்திடும் செயலாகும்.
இதனை சிவில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் வன்மையாக கண்டிப்பதோடு தொடர்ந்து இதற்கு இடம் அளிக்கவும் கூடாது.
இல்லையேல் வீட்டுக்குள் புற்றாக அது வளர்ந்து விடும். தென்னிந்திய திரைப்படங்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு இலங்கையில் திரையிடப்பட்ட காலம் போய் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் நாள் முழுவதும் பல திரைப்படங்களை காட்சிப்படுத்துவதோடு அதனோடு ஒட்டிய கலாச்சாரத்தை ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் மையம் கொள்ளும் அளவுக்கு விரிவுபடுத்தி உள்ளன. வடகிழக்கும், மலையகமும் இதனால் இந்தியாவின் இன்னொரு மாநிலமாக தோன்றியது என சிந்திக்க வைத்துள்ளது.
அதற்கு மத்தியில் தென்னிந்திய தொலைக்காட்சி அலைவரிசை நடத்தும் பாடல் போட்டி பள்ளி செல்லும் மாணவர்களை தம் வசம் ஈர்த்துள்ளதோடு அவர்கள் திரையிசை பாடல்களை மந்திரங்களாக முணுமுணுக்கவும் வைத்துள்ளது.
அவர்களின் கல்வியை அழிக்கும் செயலை ஏற்க முடியாது. அண்மையில் அவ் அலைவரிசை நடாத்திய பாடல் போட்டியில் பங்கு பற்றிய வடக்கு மாகாண மாணவி வெற்றி பெற்றதோடு, மலையக மாணவி ஒருவர் சமூக மட்டத்தில் புகழை அடைந்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் அவர்களின் வெற்றி பாராட்டுக்குரியது. ஆனால் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் கதைக்கும் அளவிலும், ஜனாதிபதி பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுக்கும் அளவிலும் அது மக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
திரைப்பட கலாச்சாரத்துக்குள் மக்களையும் இளம் சந்ததியினரையும் தள்ளி இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற சமூகத்தின் இன்னுமொரு அடையாள கூறான கலாச்சார பண்பாட்டு அழிவையும் தீவிர படுத்தும் செயலாகும். கல்வியை சீரழிக்கும் போதை செயலுமாகும். இது தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
அதன் இன்னும் ஒரு செயல் திட்டமாகவே கிழக்கு மாகாண ஆளுநர் தமிழர் கலாச்சாரம் என இதுவரை காலமும் இந்தியாவின் தமிழகத்தில் பொங்கல் வீர விளையாட்டாக இருந்த ஜல்லிக்கட்டினை இறக்குமதி செய்துள்ளார்.
இதில் விளையாட்டுக்கு அப்பால் அரசியலும் உள்ளது என்பது உண்மை.மேய்ச்சல் தரை போராட்டத்திற்கு முடிவு கட்டி கால்நடை பணியாளர்களை பாதுகாக்க முடியாதவர்கள் வடகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் பண்பாட்டை காக்க வழிசமைக்காதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நிகழ்த்துவது யாரை திருப்திப்படுத்துவதற்காக? இதன் அடுத்த கட்டம் தமிழ் மற்றும் சிங்கள மாடுகள் மோதும் நிலையும் உருவாக்கலாம்.
அனேக மக்கள் தம்மை மலையக தமிழர்கள் என இன ரீதியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்கும் போது அவர்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று தொடர்ந்து அடையாளப்படுத்தும் தொண்டமான் குழுவினர் வடகரத்திலும் மலையகத்திலும் இந்த திட்டத்தை விரிவு படுத்தும் செயலை மௌனமாக அங்கீகரித்து தற்போது பண்பாட்டு அழிவை முன்னெடுக்க பொங்கல் விழாவை பயன்படுத்துவது வெட்கக்கேடான செயல் ஆகும்.
அத்தோடு இதன் மூலம் தான் பேரினவாதிகளின் கைக்கூலி என்பதையும் அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை தமிழர்கள் வன்மையாக கண்டிப்பதோடு சிவில் சமூக அமைப்புக்கள் பண்பாடு காப்பதற்கு அமைப்பாக செயல்படாவிடின் பாரிய அழிவுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகும் எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை