மக்களுக்காக!!
மக்கள் திரட்சியே இன்று முக்கிய தேவையாக உள்ளது.
தியாகத்தின் திரு உருவங்களை நினைவு கூர்ந்து மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
2009 இற்கு முன்னர், வன்னியை தளமாக கொண்டு செங்கோல் ஏந்திய ஒரு அரசாட்சி இடம்பெற்றது. அக் காலங்களில், ' மாவீரர் தினம்' என்பது, போராட்ட வாழ்வியலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. அதன் பின்னரான அரசு, அதை ஒரு அச்சம் தரும் நிகழ்வாகவே பார்த்தது.
கால மாற்றம்...இம்முறை, வழமையை விடவும் ஏராளமான மக்கள் அலையெனத் திரண்டு தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதிலும் இந்த மாவீரர் தினத்தில் இளம் சந்ததியினரை அதிகம் காணக்கிடைத்தமை மகா சந்தோசமான ஒரு விடயம்.
ஆனால் , மாவீரர்களின் கனவுக்காக நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய வேண்டும்?
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற அகிம்சை நாயகனின் வார்த்தைகளே அவர்களின் ஆசையும்.
இன்றைய காலத்தின் தேவையும் கூட அதுவேதான். திரட்சி மிக்க கூட்டுடிணைவானவர்களாக தமிழர்கள் மாறுவதே தற்போதைய முக்கிய நிலைப்பாடு.
எமது தமிழ் அரசியல் பாதையில் கட்சிப்பிளவுகள் என்பவை மிக அதிகம். தமிழர்கள், பிரித்தாளும் தந்திரம் மூலமும் விலைபோகும் துர்ச்செயல் மூலமும் சிதறடிக்கப்படுகின்றனர்.
ஒரே கட்சிக்குள் இருந்தவர்களே, எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாறுகின்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. இதனால் ஒட்டு மொத்த அரசியல் அபிலாஷை என்பது கேள்விக்குறியான ஒன்றாக மாறுகிறது.
2009 இற்கு முன்னர், நாம் எல்லோரும் தமிழர்கள் என்கிற ஒரே நிலைப்பாட்டில் ஒரு தலைமையின் கீழ் சேர்ந்திருந்தோம்.
ஆனால், இன்றைய பிளவு,
'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்கிற நிலையைக் ஏற்படுத்தியுள்ளது.
'தமிழர் என்றொரு இனம் இருந்தது. தனியே அதற்கொரு குணம் இருந்தது'
அந்தக் குணம் மாறாமல் வாழ்தலே இனத்தின் கருவூலத்தை காப்பதற்கான அடையாளம்.
தேசம் காணப் போரிட்ட தேவ தருக்கள் எங்கள் மாவீரர்கள்.
அவர்கள் வெளிப்படுத்திய வீரத்தையும் ஈகத்தையும் நாமும் வெளிப்படுத்த வேண்டும்.
'யாரோ பெற்றுத்தரட்டும் விடுதலையையும் சுதந்திரத்தையும்' என நாம் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது.
இனிமேலும் கைகட்டி வேடிக்கை பார்க்காது விரைந்து செயலாற்றவேண்டும். அதுவே தமிழின விடுதலையை விரைவாக்கும்.
கருத்துகள் இல்லை