நாட்டு நிலைமை இப்படியாச்சு!!
மூலை வீட்டு முத்துலிங்கத்தார்

அஞ்சியம் சிலவழியார் 

மூத்த பெட்டைக்கு சீதனம் இல்லாம

மாப்பிள்ளை பிடிச்சிட்டார் 


ஆயிரம் காட் அடிச்சு

அயலட்டை எல்லாம் குடுத்து 

வாயில கை வைக்கிற அளவு

வகை வகையா விருந்து வைக்கோணும் 


மண்டபம் சாப்பாடெல்லாம்

தன்ர செலவு எண்டு சொல்லி

மருதனார்மடம் சந்தைக்கு 

மரக்கறி வாங்க என்னோடு வந்தார் 


முத்தல் கத்தரிக்காயே 

முதல் அதிர்ச்சி

எண்ணூறு ரூபாய்

எதுக்கெண்டு கேட்டார் 


வெண்டிக்காய் விலை கேட்டு

வெடுக்கெண்டு கோபப்பட்டார்

கண்டிப்பாய் வெண்டிக்காய்

வேண்டாம் எண்டே சொன்னார்


பாகற்காய் விலைகேட்டு 

சோகமா ஆயிடிட்டார் 

தக்காளி வாங்கப்போய்

தகராறு செய்ததுதான் மிச்சம்


கரட்டை கண்ணால பாத்தா

தரோணும் தொண்ணூறாம்

கையால தொட்டா முந்நூறாம்

கடைசிவரை விலை கேக்கவே இல்லை 


புடலங்காய் விலை கேட்டு

குடல் வெளிய வந்திட்டுது 

பயித்தங்காய் விலை கேட்டு

பைத்தியமே பிடிச்சிட்டுது


மிச்சம் இல்லாம உருவுறீங்களே 

கச்சையாவது மிஞ்சுமா

பச்சை மிளகாய் வியாபாரிக்கு

பச்சை பச்சையா திட்டிப்போட்டார்


உருளைக் கிழங்கு விலை கேட்டு

உருண்டு பிரண்டு எழும்பி 

கருணைக் கிழங்கை கையில எடுத்து 

கருணை காட்டேலாதோ எண்டார் 


முருங்கைக்காய் மூவாயிரம் எண்டதும்

முழி பிதுங்கி வெளிய வந்தது

வெங்காய விலையால அடிபட்டு 

பெருங்காயமே வந்திட்டுது


வேதனை கூடினதால

வெளியால வந்து நிண்டு 

சீதனத்தை குடுப்பம் 

செலவை அவையள் பாக்கட்டும்


கோவணத்தை இறுக்கிக்கட்டி 

ஏறியிருந்து சொன்னார் 

வாகனத்தை விடடா

சம்மந்தி வீட்டுக்கு எண்டு 


இணுவை நித்தியதாஸ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.