ஈரத்தீ (கோபிகை) - பாகம் 29!!.

 


அன்று ஞாயிற்றுக்கிழமை,  கலகலவென இருந்தது தேவமித்திரனின் வீடு.  


காலை உணவை நானே செய்து கொண்டு வருவதாக ஏற்கனவே சொல்லிவிட்டதால் தேவமித்திரனுக்கும் அகரனுக்கும் தோசையும் பச்சை மிளகாய் அரைத்து தாளித்த சம்பலும்

மாமாவுக்கு பயறு அரைத்தகஞ்சியும் செய்து கொண்டு காலையிலேயே நானும் வண்ணமதியும் புறப்பட்டு வந்து விட்டோம். 


என்னைப் பார்ப்பதற்காக மாமா வாசலிலேயே காத்திருந்ததைக் கண்டபோது,  உடைப்பெடுத்த என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. 


காரை விட்டிறங்கியதும் ஓட்டமும் நடையுமாக என்னருகில் வந்த மாமா,  

"கனியம்மா.... " என உயிரைத்தொடும் குரலில் அழைத்ததும் குனிந்து  அவரது கால்களைக் கட்டிக்கொண்டு  தேம்பியழுத என்னை தேவமித்திரன் தான் தூக்கி நிறுத்தி கண்களைத் துடைத்தார். 


"கனி.... அனாதை... " 

 "அப்பா.. அழாதேங்கோ.... பாருங்கோ அப்பா... கனியும் அழுகிறா.... "


இப்படி எங்கள் இருவரையும் தேற்றிக் கொண்டிருந்த தேவமித்திரனின் கண்களில்   இருந்து தாரைதாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. 



வண்ணமதியும் அகரனும் எங்கள் மூவரையும் பார்த்தபடி ஏங்கிப் போய் நின்றனர். 


அப்போது தான் அங்கே வந்த பக்கத்து வீட்டு பாமதி அக்கா,

"வந்த பிள்ளையை தெருவிலையே நிக்கவைச்சு அழுதுகொண்டிருக்கிறியள்,  தேவா,  அப்பாதான் அழுகிறார் எண்டால் நீயும்சேர்ந்து அழுகிறாய்,  தமிழனுக்கு வாழ்நாளெல்லாம் அழவேணும் எண்டுறது விதிச்ச விதி.  அழுது கரையிற துயரமே தமிழராப் பிறந்த எங்கட துயரம்.  

காலம் முழுவதும் நாங்கள் அழுதுதான் தீர்க்கப்போகிறோம்.. வாங்கோ .... உள்ள வாங்கோ.... அம்மாச்சி.... அழாதை... முதலிலை உள்ள வா.... "


கரம் பற்றிதேவமித்திரனின் வீட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார். 


கண்களை அழுத்தி துடைத்தபடி உள்ளே செல்லவும்.... 

"பொறம்மா... பாமதி.... எவ்வளவு காலத்துக்கு பிறகு என்ரை மருமகள் வீட்ட வந்திருக்கிறாள்...நான்... .... எல்லா அடுக்கும் செய்து வச்சிருக்கிறன்... ஒருக்கால் உள் மேசையிலை கிடக்கிற அந்த தட்டை  எடுத்துக் கொண்டு வாம்மா... "


மாமா சொல்லவும் 

அவரை ஆராயும் பார்வை பார்த்த தேவமித்திரன்,  "'என்னப்பா... "என்று கேட்டதற்கு 


"அது ஒண்டும் இல்லை.... பிள்ளையை ஆலாத்தி எடுத்து வரவேற்பம் எண்டு தான்..." என்றுவிட்டு 

"நீ கொண்டு வாம்மா பாமதி,"  என்றதும் 


"அப்பா... நான் என்னத்துக்கு.... பொறுங்கோ... அங்காலை,  வதனி நிக்கிறாளோ எண்டு பாப்பம்... "



"ஏன் நீ எடுத்தால் என்ன.... ?"


"அப்பா... கனி வாழப்போற பிள்ளை, வாழ்க்கையை இழந்து நிக்கிற நான் முதல் முதலா ஆரத்தி எடுத்து கனியம்மாவை வரவேற்கிறதே  ...வேண்டாம் அப்பா" 


"அக்கா என்ன சொல்லுறீங்கள்?  நீங்கள் எடுக்கிறது என்ன கூடாது... மனதில் அன்பு இருக்கிற வரைக்கும்  உந்த ஒண்டுக்கும் உதவாத பிற்போக்கு தனங்கள் என்ன செய்யும்.... ஆலத்தி விசயம் எனக்கு இப்ப தான் தெரியும்... ஆனா.. இப்ப நான் சொல்லுறன் நீங்கள் எடுங்கோ... "


"மாமா... என்ன இதெல்லாம் ....நான் என்ன.... மாமா... எனக்கு உங்களைப் பார்த்ததே பெரிய விசயம்.... உதெல்லாம் வேண்டாம்...."


"கனியம்மா....அது.... "

பாமதி அக்கா சங்கடமாக நிற்க,  

"அக்கா உந்த சம்பிரதாயங்களுக்காக நான் சொல்லேல்லை.... எனக்கு என்னவோ மாதிரி இருக்கு" என்றேன். 


"பிறகென்ன..பிள்ளை... பாமதி நீ எடம்மா... என்ரை பெரிய ஆசை அது.... "


மாமா சொல்லவும் என்னால் தடுக்க முடியவில்லை. 

தேவமித்திரனைப் பார்க்க,  சிறு புன்னகை செய்து தலையை ஆட்டிய அந்த தோரணையில் என்ன இருந்ததோ நான் பேசாமல் நின்று விட்டேன். 


அந்த சம்பிரதாய வரவேற்பில் அகரனையும் வண்ணமதியையும் அருகில் அழைத்து கொண்டேன்.தேவமித்திரனனையும் கூப்பிட. வேண்டும் போல தோன்றினாலும் அது சங்கடமானதாக தோன்றியதோடு, பாமதி அக்கா ஏதும் நினைத்தாலும் என்று பேசாமல் இருந்தேன். 


வீதியில் மதில் கரையாக நின்ற மரத்தில் சாய்ந்து நின்று கொண்டு, விழிகளை இமைக்காது பார்த்துக் கொண்டிருந்ததேவமித்திரனனின் பார்வை என்னை எதுவோ செய்தது.


செஞ்சோலையில் வளர்ந்த காலத்திலாகட்டும்,  அதன் பிறகு அருட்சகோதரிகள் மடத்தில் இருந்த காலத்திலாகட்டும்,  அதன் பிறகு,  பல்கலைக்கழக வாழ்க்கையில் ஆகட்டும் ஒரு போதும் ஒரு ஆணின் பார்வை என்னை  இப்படி அலைக்கழித்ததில்லை.  அதற்கு நான் அனுமதித்ததும் இல்லை.  சிறு வயதிலேயே எனக்கு ஏற்பட்ட இழப்புகள்,  நான் பார்த்த துயரச் சம்பவங்கள் இவை எல்லாம் என்னை ஒரு இறுக்கமான மனநிலைக்குள்தான் தள்ளியிருந்தது. 


நான் கறுப்பான பெண் என்பதாலும் மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களை விரும்பாதவள் என்பதாலும் என்னை யாரும் கணக்கெடுக்காமல் விட்டிருக்கலாம்... 


ஆனால்,  தேவமித்திரன் பார்த்த அந்தப் பார்வை,  சாதாரணமாத ஒரு பெண்ணை ஆண் பார்க்கிற பார்வையாக இல்லை,  



காலகாலமாக தொலைத்துவிட்ட, தனக்கான  ஒன்றை தேடிக்கண்டுபிடிக்கிறபோது ஏற்படுகிற பேரானந்தம் காட்டுகிறது பார்வையாகவே இருந்தது. 


ஏதேதோ சிந்தனைகளில் உறைந்து போய் நின்ற என்னை,  

நீயும் வா தேவா,  நீ செய்யிற சேவைகளுக்கு ஊர் கண் முழுக்க உன்னிலை தான் இருக்கும்,   ஆலாத்தி சுத்தி திருஷ்டி கழிப்பம்" என்ற பாமதி அக்காவின் வார்த்தைகள் நிஜ உலகிற்கு கூட்டி வந்தது. 


எதுவுமே சொல்லாமல் அகரனுக்குப் பக்கத்தில் வந்து நின்றதேவமித்திரனை ஆழமாகப் பார்த்தேன். 


எங்கள் பார்வைகள் ஏதேதோ சொல்லிக்கொண்டன. 


தீ தொடரும் ....





  







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.