ஈரான் ஜனாதிபதியின் திடீர் இழப்பு இஸ்லாமிய உலகுக்கு பேரிழப்பு-மர்ஜான் பளீல் எம்.பி!


 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹ் உள்ளிட்ட 09 பேர்  சென்ற ஹெலிகொப்டர்  விபத்துகுள்ளாகி அனைவரும் உயிரிழந்த செய்தி கேள்விப்பட்டு தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். 

 

அவர்களின் திடீர் மறைவு இஸ்லாமிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்  என்றும் அவர் தனது அனுதாபச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து அவர்; 

 நேற்று முன்தினம் (19) ஈரானின் அஸர்பைஜான் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த அதிர்ச்சிச் சம்பவம்  ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் பெரும் கவலையையும்  மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னார் 2021ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற நிகழ்வில் இலங்கை ஜனாதிபதியின் பிரதிநிதியாக நான் கலந்துகொண்டேன். அப்போது கூட நான் அவரை சந்தித்தபோது, மிகவும் துணிச்சல்மிக்க ஒரு தலைவராக காணப்பட்டார். இலங்கையின் ஒரு நண்பராக அவர் செயற்பட்டார். 

அந்த சந்திப்பில்கூட  முஸ்லிம் நாடுகள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டுமென்ற சிந்தனையில் அவர் இருந்ததை என்னால் காண முடிந்தது. முஸ்லிம் நாடுகள் பிரிந்து செயற்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை தொடர்பில் ஜனாதிபதி ரைஸியிடம் நீண்ட எதிர்பார்ப்பு இருந்ததோடு, இலங்கை ஈரானின் நீண்டகால நண்பன் என்றும் அவர் என்னிடம் தெரிவித்ததை இன்றும் மறக்க முடியாதுள்ளது. 

அவர் அண்மையில் இலங்கைக்கு வந்தபோது கூட நான் அவரை சந்தித்து சுகம் விசாரித்தேன். மிகவும் துணிச்சல் மிக்கவராக காணப்பட்ட அவர், பலஸ்தீன விடயத்தில் மிகவும் கவலையுடன் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இப்படியானதொரு சிறந்த தலைவர் இன்று முஸ்லிம் உலகிலிருந்து பிரிந்து செல்வது மிகவும் கவலையாக இருக்கிறது.  

ஜனாதிபதி ரைஸி, ஈரான் மற்றும் இஸ்லாமிய உலகின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். பலஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் செயலாற்றியதில்  அவருக்கு நிறைய பங்களிப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.