ஈரத்தீ (கோபிகை) - பாகம் 32!!

 


மஞ்சள் வெயில் கலந்த இளங்காற்று வீசிய அந்தப் பொழுதில் மாலை நேரத்து சூரியன் தன் பொன்னொளிகளைப் பரப்பிக் கொண்டு அந்த நாளை முடித்துக் கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். 


துயிலுமில்லம் அமைதியாக இருந்தது. தங்கள் உறவுகளை விதைத்துவிட்டு,  தவிப்போடு வாழ்ந்துகொண்டிருக்கும்  பலருக்கு அன்றைய நாள், அகம் நிறைக்கும் ஒரு நாள். 


தம் பிள்ளைகளை,  சகோதரர்களை, துணையை, தந்தையை என அவர்களின்கல்லறை அருகிருந்து  ஆராதிக்கிற நாள். 


மெல்ல மெல்ல அந்த இறை இல்லத்திற்குள் காலடி பதித்தோம். 


"விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்"  பெயர் பதித்த பலகை கண்களில் பட்டது.  ஊதுபத்தியும்  மலரிதழும் இணைந்து தருகிற வாசனை நாசியின் உள்நுழைந்து  இதயத்தை நிரம்பியது. 


கல்லறைகள் ஏதுமில்லை,  உழுது விடப்பட்டிருந்த பொட்டல் வெளியாக காட்சியளித்த எங்கள் கடவுளர் இல்லத்தில்,   கம்பிகள் நடப்பட்டு பந்தங்கள் சுற்றப்பட்டிருந்தது. ஒவ்வொரு பந்தங்களுக்கு அருகிலும் ஒவ்வொரு தென்னை மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தன.


நாங்கள் வேளைக்கே போய்விட்டோம். நிறைய நினைவிடங்கள் ஆட்களற்று இருந்தது.  ஒரே வரிசையில் நான்கு பந்தங்கள் இருந்த இடம் ஒன்றில் வரிசையாக நின்று கொண்டோம். மனமெல்லாம் இனம்புரியாத ஒரு வலி. இதயப்பரப்பெங்கும் மெல்லிய கோபம் வெளிப்பட்டு நின்றது.  


கல்லறைகளை இடித்து அழித்து,  அந்த புனிதர்களின் நினைவுகளைப் பொசுக்கிவிடலாம் என,  ராஜபக்சகுடும்பதத்தின் இனவாத அரசியல் உரைத்த மனக்குரோதத்தின் வெளிப்பாடு தான் இந்த துயிலுமில்லங்களின் அழிப்பு நடவடிக்கை. 


ஆனாலும் அங்கே கூடியிருந்த மக்களின் மனவேட்கை,  எங்கள் காலதெய்வங்கள்  எந்தக்காலத்திலும் எங்களின் மனதை விட்டு மறையமாட்டார்கள் என்பதை, அரசிற்கு பறைசாற்றியிருக்கும். 


மக்கள் சாரைசாரையாக வந்து கொண்டே இருந்தனர்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள் தான் காணப்பட்டது.  


உயர்ந்து நின்ற சிவப்பு மஞ்சள் கொடிகள்,    காற்றில் அசைந்து, சாயாத  தன் இலட்சிய தாகத்தை ஆக்ரோசமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. 


அங்கே ஒலித்துக் கொண்டிருந்த தெய்வீக கானங்களும் புரட்சிகரமான வசனங்களும் மெய்யில் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது. 

 அன்னையர் பலரின் ஒப்பாரி பாடலில், வழிந்தோடிய கண்ணீரில், அந்தச் செம்மண் தரை,  மெல்ல மெல்ல ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தது. 


என் முன்னால் இருந்த பந்தத்தை பார்த்த போது, பீறிட்டு எழுந்த அழுகையை என்னால் அடக்க முடியவில்லை.  


அருகில் நின்ற பாமதி அக்காவோ புற்தரையில் தலையை முட்டி, புரண்டு துடித்து ஓலமிட்டு அழுது கொண்டிருந்தா. 


பிள்ளைகள் மூவரையும் தேவமித்திரன் தன்னோடு வைத்திருந்தார். 


நேரம் ஐந்து முப்பது என்றது கடிகாரம்.  நானும் பாமதி அக்காவும் படங்களை எடுத்து கம்பிகளில் சாய்த்துவைத்துவிட்டு நிமிர்ந்த போது,  


"அண்ணா... என்ன இஞ்சை நிக்கிறியள்,  முன்னுக்கு வாங்கோவன் "  என்றபடி வந்து நின்ற ஏற்பாட்டாளர்களிடம்,  


"பரவாயில்லை.... நான்.. இஞ்சையே நிக்கிறன் " என்றார் தேவமித்திரன் மெல்லிய குரலில். 


"ஒருக்கா வந்திட்டு வாங்கோ அண்ணா" என்றபடி கையோடு கூட்டிச் சென்றனர். 

மேடையில் நின்றவர்கள் தேவமித்திரனைக் கண்டதும் அன்பு ததும்ப அணைத்து மகிழ்ந்தனர். 


"எல்லாம் ஒழுங்குபடுத்தி தந்திட்டு,  பேசாமல் நிக்கிறாய்?"  அவருடைய வயதை ஒத்த ஒருவர் கேட்க,   


"இதில என்னடா இருக்கு,  நீங்கள் எல்லாம் பாத்துச் செய்தால் சரிதானே... "என்றபடி,  எல்லோருடனும் கதைத்துவிட்டு ஏதோ சொன்னபடி கீழே வந்துவிட்டார். 


மேடைக்கு அருகில் தான் நாங்களும் நின்றுகொண்டிருந்தோம். 


பாமதி அக்கா, மூன்று படங்களுக்கும் அருகில் ஊதுபத்திகளைக் கொழுத்தி, கொண்டு வந்திருந்த சிற்றுண்டி வகைகளை வாழை இலையில் எடுத்து வைத்தார். 

 பரவி வந்த ஊதுபத்தியின் புகை,  வட்டமாகச் சுழன்று வளைந்தது. 


ஏற்பாட்டாளர்களாக நின்ற இளைஞர்கள் மஞ்சள் சிவப்பு துணிகளை தலையில் கட்டி,   கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தார். 


அங்கங்கே தண்ணீர் போத்தல்களும் பணிஸ் போன்ற சிற்றுண்டி வகைகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. 


நேரம் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. 

 நேரம் 6. 05 என்றதும் பிரதான சுடர் ஏற்றப்பட்ட,  சுற்றி நின்ற மக்களும் தமக்கு முன்னால் இருந்த சுவர்களை ஏற்றினார்கள்.  பெருகித் தெறித்து அந்த ஒளியில் எங்கள் கடவுளரின் முகங்கள் பிரகாசமாகத் தெரிந்தது. 

மாவீரர் நாளும் அதன் அனுஷ்டிப்பும் சாதாரண நிகழ்வு அல்ல.  அது எமது இனத்திற்கான வரலாற்றுச் சுவடு. 


கல்லறை மேனியர் கண் திறப்பார்களே.... கார்த்திகை நாளிலே.... 




தீ தொடரும்.... 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.