திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமிக்கு பக்தர்கள் திரள்வது ஏன்?
`தலையா... கடல் அலையா' - திருச்செந்தூர் கடற்கரையில் பௌர்ணமிக்கு பக்தர்கள் திரள்வது ஏன்?
புகழ்பெற்ற ஆலயங்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூரில் நேற்று குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு கடற்கரையிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.
திருச்செந்தூர் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் செந்தில் ஆண்டவர் அருளும் தலம். அதனால்தான் இங்கே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்வார்கள்.
ஒரு முருகன் பாடலில், 'கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?' என்று வரி வரும். அந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் கந்த சஷ்டிப் பெருவிழாவின் போது சூரசம்ஹார நிகழ்ச்சி அன்று கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிரம்பிக் காணப்படுவார்கள். அப்படி ஒரு காட்சியை நேற்று திருச்செந்தூர் கடற்கரையில் காணமுடிந்தது.
நேற்று ஆடிமாதப் பௌர்ணமி தினம் என்பதால் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக சங்கரன்கோவில் சங்கரநாராயணர் - கோமதி அம்மன் ஆலயத்தில் ஆடித்தபசுத் திருவிழா நடைபெற்றது. அதேபோன்று புகழ்பெற்ற ஆலயங்களான திருவண்ணாமலை, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூரில் நேற்று குவிந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு கடற்கரையிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.
சமீபகாலமாக இவ்வாறு பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் கடற்கரையில் தங்கியிருப்பது அதிகரித்திருந்தாலும் நேற்று ஆடிப்பௌர்ணமியை ஒட்டி பக்தர்கள் மிக அதிக அளவில் கூடினர். கடற்கரை முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இதுகுறித்து அங்கிருந்த பக்தர்களிடம் கேட்டபோது, "பௌர்ணமி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்து கடற்கரையில் தங்கினால் நம் வினைகள் விலகும் என்கிறார்கள். அதற்காகத்தான் குடும்பத்தோடு வந்திருக்கிறோம். இரவு முழுவதும் இங்கே தங்கியிருந்து காலை சமுத்திரத்தில் நீராடிப் பின் புறப்படுவோம்" என்றனர். உள்ளூர் காரர்களிடம் பேசியபோது, "இவ்வளவு கூட்டத்தை எங்கள் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை. பௌர்ணமி அன்று இரவு தங்கினால் நல்லது என்று யாரோ ஜோதிடர்கள் சொல்லப்போக மக்கள் இங்கே குவிந்திருக்கிறார்கள். கடற்கரையில் கால்வைக்க இடம் இல்லை. எந்த அசம்பாவிதமும் இன்றி எல்லோரும் பாதுகாப்பா இருந்து தரிசனம் செய்து செல்ல அந்த முருகன்தான் அருள வேண்டும்" என்றார்.
உண்மையில் திருச்செந்தூரில் கடற்கரையில் இரவு தங்க வேண்டுமா? அவ்வாறு தங்கினால் நல்லதா என்பது குறித்து ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.
"திருச்செந்தூர் அற்புதமான தலம். அதுவும் குருஸ்தலமாகப் போற்றப்படுவது. ஜாதகத்தில் குருபலம் குறைவாக இருந்தால் திருச்செந்தூர் சென்று வழிபடச் செல்வதுண்டு. பழைமையும் பெருமையும் வாய்ந்த தலம் என்பதால் எப்போதும் அங்கே திருவிழாக் கூட்டம் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நேற்று கூடியிருக்கும் கூட்டம் வரலாறு காணாதது. பொதுவாக குருவருள் வேண்டுபவர்கள், பௌர்ணமி நாளில் சித்தர் பீடங்களை தரிசனம் செய்து, அங்கே இரவு தங்கியிருந்தால் நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் புகழ்பெற்று விளங்குகிறது. நாளுக்கு நாள் அங்கு குவியும் கூட்டத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது
நேற்று குரு பூர்ணிமா. திருச்செந்தூரிலும் குருமார்களான மூவர் சமாதி உள்ளது. எனவே பௌர்ணமியில் திருச்செந்தூர் சென்று வழிபாடு செய்வது விசேஷமே. குருபூர்ணிமாவாக இருப்பதால் மக்கள் கடற்கரையில் தங்கி சித்தர்களின் அருளைப் பெறலாம் என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் திருச்செந்தூரில் இரவு கடற்கரையில் தங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லவில்லை.
யாரோ ஒருவருக்குத் தனிபட்ட முறையில் சொல்லப்படும் பரிகாரப் பரிந்துரையைக் கூட்டமாக பக்தர்கள் அனைவரும் செய்ய வேண்டிய அவசியமில்லை. திருச்செந்தூர் மண்ணை மிதித்து இறைவனை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் நீங்கிவிடும். அப்படியிருக்க இரவு தங்க வேண்டுமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுங்கள். ஆன்மிகப் பயணம் பக்திப்பரவசத்தில் முடியவேண்டுமே தவிர கூட்ட நெரிசலில் சிக்கி அவதியில் முடிந்துவிடக் கூடாது.
மேலும் சித்தர் ஜீவசமாதி நம் தமிழகமெங்கும் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊரில் வாழ்ந்து மறைந்த சித்தரின் ஜீவ சமாதி ஒன்று நிச்சயம் இருக்கும். பௌர்ணமி அன்று அங்கு சென்று வழிபடலாம். இரவு தங்கலாம். திருச்செந்தூர் அந்த முருகக்கடவுள் அருள்பாலிக்கும் தலம் என்பதில் சந்தேகமேயில்லை. அதேவேளையில் ஒரே நாளில் அங்கே கூடினால்தான் அருள் கிடைக்கும் என்பதில்லை. மனதார நினைத்து வணங்கினால் அவன் உங்களைத் தேடி ஓடிவருவார் என்பது சத்தியமான உண்மை" என்றார்.
கருத்துகள் இல்லை