பெண்!!

 


பெண்களின் மனதை புரிந்துக்கொள்ள முடியாது என்று சொல்வார்கள். 

எதனால் எப்படி இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை. 

ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனம் விட்டு பேசுவதற்கான வாய்ப்பையும் சூழலையும் அமைத்துக்கொடுத்தால்..

அவர்களின் மனதை எளிதாக புரிந்துக்கொள்ள முடியும். 


பெரும்பாலான பெண்கள் தங்கள் மனதில் இருப்பதை, தங்களுக்கு  விருப்பமானதை, தாங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் பகிர்ந்துக்கொள்ள அதிகம் தேடுவது ஆண்களை மட்டும்தான். 

அதுவும் தன்னுடைய கணவன் அல்லது தன்னுடைய காதலன் அல்லது தன்னுடைய தோழன் என்ற நிலையில் இருக்கும் ஆண்களிடம்தான் தங்களுக்கான தேடுதல்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். 


ஆண்களிடம் இருக்கும் ஒரு அற்புதமான குணம்.. 

குறிப்பிட்ட வயது வரை பெரும்பாலான தருணங்களில் தனது மனைவியாகட்டும், தனது காதலியாகட்டும், தனது தோழியாகட்டும், யாராக இருந்தாலும்..

அவர்களை பெண்ணாக ரசிப்பதை, பெண்ணாக நேசிப்பதை, பெண்ணாக கவனிப்பதை என்ற எதிர்பாலின ஈர்ப்பினை தனது இயல்பாக கொண்டிருப்பார்கள்.


எந்தவொரு பெண்ணும் மற்றவர்கள் தன்னை தேவதையாக கொண்டாடப்படவேண்டும் என்று எப்போதும் விரும்புவதில்லை. அப்படி எதிர்பார்ப்பதுமில்லை.


அவளுடைய எண்ணங்கள் எல்லாம்.. தன்னை பெண்ணாக கவனித்து, தன்னை பெண்ணாக உணர்ந்து, தன்னை பெண்ணாக மதித்து..

தன்னை தனக்கேற்ற பெண்ணாக ரசிக்கும், நேசிக்கும் ஆண்களைதான்

தனது மனதினில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாக மட்டும்தான் இருக்கும். அதற்காக காத்திருப்பாள். 


அதுபோன்ற ஒரு ஆண் அவளுடைய வாழ்க்கையில் கிடைக்கும்போது.. 

அவன் கணவனோ, காதலனோ, தோழனோ எந்த நிலையில் இருந்தாலும் அவனை எக்காரணம் கொண்டும் தொலைக்காமல் இருக்க, 

எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பாள். 

எதற்கும் துணிந்திட தன்னை தயார்படுத்திக் கொள்வாள். 


அதே நேரத்தில் தான் மேற்கொள்ளும் தியாகத்திற்கு இணையாக அவனை சந்தேகப்படவும் செய்வாள். சண்டை போட்டுக்கொண்டும் இருப்பாள். 


இதனை புரிந்துக்கொண்டு அவளுடன் தொடர்ந்து பயணிக்கும் அந்த ஆண் அதிர்ஷ்டசாலியாகிறான்.  

புரிந்துக்கொள்ளாமல் விலகிச் செல்லும் ஆண் சராசரி மனிதனாகி விடுகிறான்.  


 மொத்தத்தில் பெண் என்பவள் புரிந்துக்கொள்ள முடியாத அகராதி எல்லாம் இல்லை..

பெரும்பாலான ஆண்களால் படிக்க நேரம் ஒதுக்க முடியாத, அர்த்தங்கள் பல பொதிந்த ஒரு வாழ்வியல் புத்தகம்.


வாழ்வியல் புத்தகத்தின் அருமையை உணர்ந்து ரசித்து நேசித்து ஒவ்வொரு பக்கத்தையும் அதற்குரிய ரசனைகளோடு புரட்டி முழுமையாக படித்தால், 

எளிதில் புரிந்துக்கொள்ள முடிந்த சராசரி மனுசிதான் பெண்..


பகிர்வு



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.