உயிரின் ஓசை - சுரேஷ் தர்மா!!




உடலைத் துளைத்தெடுத்த குளிரைப் பொருட்படுத்தாது யன்னல் வழியே வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
எதிர் வீட்டுச் சாளரம் வழியே பனி உருகி நீராக வடிந்து கொண்டிருந்தது. 
தூரத்தில் தெரிந்த சூரியப்புள்ளியானது  கோள் உலகிற்கு தனது மஞ்சள் ஒளியைப் பரப்புவதற்கு ஆயத்தமாக  பயணத்தை ஆரம்பித்திருந்தது.


கதிரையை சற்று இழுத்துச் சரிப்படுத்திக் கொண்டு நன்றாகப் பார்வையை வெளியே படர விட்டேன்.
வீதியில் மெல்ல மெல்ல மக்கள் நடமாட்டம் ஆரம்பித்தது.  எதிர்வீட்டு உக்ரேனியப் பெண், மேல் தளத்தில் நின்றபடி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது. எதிர்வீட்டு பெண்ணின் பெயர் நீடா.
நீடா சில மாதங்களாகத்தான் அங்கே குடிவந்திருந்தாள். மற்றவர்களைக் காணும் போது அவளுடைய முகத்தில் ஒரு புன்னகை விரியுமே தவிர மற்றபடி எப்போதும் அவளுடைய முகத்தில் ஏதோ ஒரு தீவிர சிந்தனை இருக்கும். சொந்த மண்ணை நேசித்த, அவலமாக அதைப் பிரிந்து வந்துவிட்ட அத்தனை பேருக்கும் இந்த உணர்வு இருக்கும் போல. ரஷ்யாவின் அதிகாரப்போக்கினால் உக்ரேனிய மக்கள் எவ்வளவு அவலப்பட்டுவிட்டனர். தமிழினத்தைப்போல பல நாடுகளுக்கும் சிதறி ஓடி தமது இருப்பையும் இயல்பையும் தொலைத்துத்தானே வாழ்கின்றனர்.

2009  இல் சரணடைதல் என்கிற மகா கொடிய கனத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு நிர்வாணிகளாக இராணுவக் கட்டுப்பாட்டைக் கடந்த போது ஏற்பட்ட துயரில் இருந்து வெளிவர முடியாமல் நாங்கள் இன்னும் தவிர்த்துக் கொண்டிருப்பது போலத்தான் நீடாவும் போல.

ஆனால் இந்த உணர்வு , எங்களில் பலருக்கு இப்போது  மங்கிப் போய்விட்டது. இனம், தேசியம், சுதந்திரம், விடுதலை உணர்வு,
இவை எல்லாம் அநேகரின் மனதில் அர்த்தமற்ற ஒன்றாக மாறிவிட்டது. ஏதோ வாழும் வரை கிடைக்கிற சௌகரியங்களைக் கொண்டு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று தான் வாழ்கின்றார்கள். வீண் ஆடம்பரங்கள் தருகிற மாய மகிழ்ச்சி நிலையானது இல்லை என்பதும் இனம் என்கிற ரீதியில் நாங்கள்  பிரித்தாளும் படுகிறோம் என்பதும் எப்போது புரியுமோ...
பெருமூச்சு ஒன்றை வெளியிட்டபடி சற்றுத் தள்ளியிருந்த சுடுநீர்ப் போத்தலில் இருந்த தேநீரைக் கப்பில் விட்டுக்கொண்டே மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தேன்.

மனைவி கனிமொழி ஏதோ நண்பர்களுடன் விருந்து என்று சென்றிருந்தாள். பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்கும் சென்று விட்டனர்.  இப்போதெல்லாம் கனிமொழி வேலை தவிர்த்து ஏனைய நேரங்களில் இவ்வாறான விசயங்களில் தான் தன்னுடைய நேரத்தைச் செலவு செய்து கொண்டிருந்தாள்.
எனக்கும் அவளுக்குமான பேச்சுவார்த்தை இப்போது மிகவும் குறைவு. எனக்கு வருகிற அரசாங்க காசில் நான் என்னுடைய வாழ்வைப் சுருக்கிக் கொண்டு விட்டேன்.

சுவாசக்கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டதில் இருந்து நான் வெளியே எங்கேயும் போவதில்லை. அதற்கு முன்பும் தேவையற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவேன். நான் நடமாடும் வரை கனிமொழி என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தவள் தான்.  இப்போது வெளியே தெரிகிற மின்மினி உலகத்தில் அவளும் வெளிச்சத்தை தேடத்தொடங்கிவிட்டாள்.
வெளிநாடு என்ற சொல்தான் மினுமினுப்பானதே தவிர அதில் அந்த அளவுக்கு மகிழ்ச்சி இல்லை என்பதைப் புரிந்து கொண்டால் மனம் தாய் மண்ணைத்தான் தேடும். அந்த மண்ணின் புழுதி வாசத்திற்காகவே ஏங்கும். இந்த இயந்திர வாழ்வை விட்டு ஓடிப்போகத்தான் நினைக்கும்.

சில மாதங்களுக்கு முதல் நானும் அநேக வணிகத்தொழில் செய்தவன் தான். எனக்குள் இயல்பாகவே இருந்த ஊடக மனம் ஒரு செய்திக்காக சில மைல் தூரம் பயணிக்க வைத்தது. அப்போது ஏற்பட்ட சிறு விபத்து சுவாசக் கோளாறை உண்டாக்கி விட்டது.
நான் தாயக மண்ணில் ஒரு ஊடகவியலாளனாகத்தான் பணி செய்து கொண்டிருந்தேன். ஈழநாதம் பத்திரிகையின் பிரதம செய்தி சேகரிப்பாளன். களமுனைகளில் செய்திகள் சேகரிப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் எனக்கு. 
கிளிநொச்சி நகரை அண்டிய எங்கள் வீட்டோடு கடைகள் இருந்தன. அம்மாதான் கடைகளைப் பார்த்துக்கொள்ளுவா.
எங்கள் மண் மாற்றானின் கரங்களில் சென்றுவிட நாங்கள் புலம்பெயர வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
என் வாழ்நாளில் நான் நினைக்கவே விரும்பாத விசயமாக இருந்தது என் சொந்த மண்ணை விட்டு வெளியே செல்வது என்பது தான். ஆனால் காலம் செய்த கோலத்தால் சுவிஸ் நாட்டின் செங்காளன் என்ற இடத்திற்கு இயற்கையால் தூக்கி வீசப்பட்ட போது வேறு வழி தெரியவில்லை.
நான் அப்போது எழுதிய வீரியமான கட்டுரைகள் நாடு முழுவதும் "தாரகன்" என்கிற என்னுடைய பெயரைத் தேட வைத்துவிட்டது. அது எம் இனத்தின் துரோகிகளுக்கும் காட்டிக் கொடுப்பவர்களுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட என்னையும் தேட ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தப் பயத்தில் கண்ணீரோடு கையேந்திய என் அம்மாவின் வேண்டுகோளைத்தட்ட முடியாமல் நானும் மனைவி கனிமொழியோடு ஊரிலிருந்து புறப்பட்டு விட்டேன். அதற்காகவே காத்திருந்தது போல அம்மாவும் இந்த உலகத்தில் இருந்து விடைபெற்று விட்டா.
ஊரில் கிளிநொச்சி நகரில் இருந்த கடைகளையும் வீட்டையும் மாமாதான் வாடகைக்கு கொடுத்திருந்தார்.  அது ஒரு தொகையாக வங்கியில் இருந்தது. அதையெல்லாம் சேர்த்து ஒரு தொழிற்கூடத்தை ஆரம்பித்து நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே எனது பெரிய அவாவாக  இருந்தது.

தங்கித் தரித்து நின்று ஆறுதலாக எதையும் செய்ய முடியாத ஒரு அவசர வாழ்க்கை இங்கே.  இல்லறங்கள் கூட இயல்பாக இல்லை. ஒப்புக்காக வாழ்வது போல் வாழ்ந்தனர். வெளி உலகத்திற்குத் தெரிந்த பகட்டில் ஊரில் இருக்கிற மற்றவர்கள் பிரமிக்கலாமே தவிர உண்மை நிலைமை வேறு.
சொந்த மண்ணில் எங்கள் ஊரில் மாமரத்திற்கு கீழே இருந்து குடிக்கிற பழங்கஞ்சிக்கு எதுவுமே ஈடில்லை என்பது இங்கு வாழ்கிற ஒவ்வொருவருக்கும் தான் புரியும்.

எனக்கும் பல கனவுகள் இருந்தன. அதற்காகத்தான் இங்கு வந்து நான்கு வருடங்களாக ஓயாமல் ஓடினேன். இப்போது இந்த நோய்  என்னை முடக்கிப் போட்டுவிட்டது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். விரைவில் இதைக் குணப்படுத்திக்கொண்டு ஓரளவு பணத்தைச் சேமித்து எடுத்துக்கொண்டு ஊருக்குப் போக வேண்டும். அங்கேதான் என் கடைசிக் காலங்களை அமைதியாக கழிக்க வேண்டும்.
கனிமொழி தான் வரமாட்டேன் என்பதை திட்டவட்டமாகக் சொல்லி விட்டாள். பிள்ளைகளையும் விடமாட்டேன் என்று கூறிவிட்டவளை நான் எதுவும் சொல்லவில்லை.
சூரியன் சற்றே மேலெழுந்து தன் பொன்னொளியை விசாலமாக்கியிருந்தான். உடற்பயிற்சியை முடித்துக்கொண்ட நீடா கீழே போக ஆயத்தமாகி தன் திரும்பிய போதுதான் என்னைக் கண்டிருக்க வேண்டும்.
உதடுகளில் புன்னகை விரிய கைகளை ஆட்டி சைகை செய்தாள். பதிலுக்கு நானும் கையை அசைத்தேன்.
சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்துக் கொண்டோம்.  இரண்டு அகதிகளுக்கான உயிரின் ஓலம் ஒலிப்பது போல இருந்தது அந்தத் தருணம்.


எழுத்து சு - ரேஷ் தர்மா.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.