ஈரத்தீ (கோபிகை) - பாகம் 49!!
ஆதவனின் வெண்கதிர்கள் மேற்கு வானை முத்தமிட ஆரம்பித்திருந்தன. நேரம் மூன்று மணி என்றது கடிகாரம். அப்போதுதான் சமையல் வேலைகள் எல்லாம் முடிந்தன.
"மச்சான்....சீலன் அண்ணாவை வரச்சொல்லிப்போட்டியே?" என்று கேட்ட தேவமித்திரன் என்னோடு சேர்ந்து
எல்லோருக்கும் சாப்பாட்டை கோப்பைகளில் போட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார்.
"நீங்களும் சாப்பிடுங்கோவன்...." பார்கவி சொல்ல
"இல்லை..நீங்கள் எல்லாரும் சாப்பிடுங்கோ..நாங்கள் கடைசியாகச் சாப்பிடுறம்..".தேவமித்திரன் சொன்னதும்
"விடு கவி...கடைசியாக இருந்து ரெண்டு பேரும் சிறப்பாகச் சாப்பிடவேணும் எண்டு நிக்கினம் போல.." என்றார் கண்களைச் சிமிட்டியபடி.
'உதை வாங்கப்போறாயடா..." என்றார் தேவமித்திரன் சிரித்துக்கொண்டே.
அகரன் இனியன் வண்ணமதி மூன்றுபேரும் தாத்தாவேலாடு இருந்து கதைத்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
நான் சிறு கரண்டி ஒன்றை எடுத்துக்கொண்டு தட்டித்தட்டி நண்டில் இருந்து தசை எடுத்துக்கொடுத்துக்கொடுப்பதற்காக மாமாவின் அருகில் சென்று விட
"பாமதி அக்கா வடிவாச்சாப்பிடுங்கோ" என்றபடி தேவமித்திரனும் பாமதி அக்காவுக்கு கறிகளை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தார்.
அது ஒரு அழகான தருணமாகத் தென்பட்டது எனக்கு. ஆனாலும் என் மனதோரத்தில் ஏதோ முள்வண்டின் குடைச்சல் போல ஒரு வலி ஓடிக்கொண்டுதான் இருந்தது. என்னுடைய உள்ளத்தின் வலி முகத்தில் தென்பட்டுவிடாதபடி மிகவும் கவனமாக முகத்தை வைத்துக்கொண்டேன். நான் சற்றுக் கலங்கினாலும் தேவமித்திரன் கண்டுபிடித்துவிடுவார். அவருடைய ஊடுரும் பார்வைக்கு முன்னால் எந்தச் சமாளிப்பும் எடுபடவே எடுபடாது. சின்ன வயதில் இருந்தே அவர் அப்படித்தான்..
நான் எந்த திருட்டுத்தனம் செய்தாலும் அவரிடம் மட்டும் மாட்டிவிடுவென்.
"வேற என்ன .....
சீனி களவெடுத்துச் சாப்பிடுறது
மாவை அள்ளிச் சாப்பிடுறது
களவாக பக்கத்து காணியில புளியங்காய் புடுங்கிச் சாப்பிடுறது
மாங்காக்கு தூள் உப்பு கொண்டுபோய்ச் சாப்பிடுறது
இப்பிடித்தான்..
நான் என்னதான் செய்தாலும் உடனே கண்டுபிடிச்சு அம்மாட்ட மாட்டிவிட்டுத்தான் மற்றவேலை பார்ப்பார்..அப்ப தேவமித்திரனை நினைச்சாலே அப்பிடி ஒரு கோபம் வரும்...
இப்ப....
என் முகத்தில் கனிந்து வழிந்த சிரிப்பைக் கண்டுவிட்டு
"என்ன ...தானாச் சிரிக்கிறா..என்ர கண்ணம்மா..?" என்றார். யாருக்கும் கேட்காதபடி.
"டேய்..டேய்..நாங்கள் எல்லாம் போன பிறகு கதையடா..." மேகவர்ணன் அண்ணா சொல்ல...
"நேரமில்லை மச்சான்..." சிரிக்காமல் சொன்னார் தேவமித்திரன்.
அங்கிருந்த எல்லோருமே விழுந்துவிழுந்து சிரித்தனர்.
அசடு வழிய அமர்ந்நதிருந்த மேகவர்ணன் அண்ணாவிடம்
"இது தேவையோ?" பார்கவி கேட்கவும்
"அண்ணாவை எல்லாரும் ஓட்டாதேங்கோ..அண்ணா பாவம்" என்றேன் நான்.
அண்ணாவுக்கு எண்டால் பரிஞ்சுகொண்டு வந்திடுவா...சீமாட்டி...." என்ற பார்கவியிடம்
"கூடப்பிறக்காத பாசத்தங்கச்சி அவள்......" சொன்ன தேவமித்திரன் அண்ணாவின் விழிகள் நீரால் பளபளத்ததை நானும் கண்டேன்.
அந்த நேரத்தை இலகுவாக்க நினைத்த தேவமித்திரன்..
"சரி..சொல்லு சமர்..ஏன் சிரிச்சனி?" என்றார்.
இல்லை..பழைய சம்பவங்கள் நினைவு வந்திட்டுது
முந்தி எல்லாம் எவ்வளவு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தனாங்கள்
பொன்வண்டு பிடிக்கிறது
மாங்காயிலை தூள் உப்பு போட்டு சாப்பிடுறது
"சீனி மா களவெடுத்துச் சாப்பிடுறது
ரெட்டை மைனா பாத்தால் அதிஸ்டம் எண்டும் ஒற்றை மைனா பாத்தால் கூடாது எண்டும் பயப்பிடுறது
ஒட்டொட்டியை எடுத்து சேர்த்து கிளிப் மாதிரி தலையிலை குத்துறது
ஆமணக்கு விதையிலை பாவைப்பிள்ளை செய்யிறது
தேங்கங்காய் முத்டது சாப்பிடுறது
ஊமலுக்குள்ள பூரான் எடுத்துச் சாப்பிடுறது எண்டு...
நான் என்ன கள்ளத்தனம் செய்தாலும் நீங்கள் கண்டுபிடிச்சு அம்மாட்டைச் சொல்லிக்குடுத்திடுவியள்..." நான் சிரித்தபடி சொல்ல
"அதுக்குப்பிறகு உன்ரை மாமியிட்ட இவன் வாங்குற பேச்சு.....இவனை ஒரு கை பாத்துப்போடுவா உன்ரை மாமி..." மாமா பெருமிதமாகச் சொன்னார்.
சீலன் அண்ணாவும் அப்போதுதான் மகனைக் கையில் தூக்கியபடி உள்ளே வந்தார்.
"அப்ப எல்லாம் அம்மணிக்கு என்னைக் கண்டாலே அப்பிடி ஒரு கோபம் வரும்..."என்றார் தேவமித்திரன் சிரிப்புடன்.
நான் சிரித்தபடி தலையை ஆட்டினேன்.
எங்கள் கதையைக் கேட்டு புன்முறுவலுடன் வந்த சீலன் அண்ணாவிடம்
"அண்ணா..சாப்பிடுங்கோ" என்றபடி நான் தட்டை எடுக்க
"அவனை என்னட்டைத் தந்திட்டு நீ சாப்பிடண்ணா..." என்ற மேகவர்ணன் அண்ணாவைத் தடுத்த பாமதி அக்கா
"நான் சாப்பிட்டு முடியுது நான் தம்பியை வைச்சிருக்கிறன் நீங்கள் சாப்பிடுங்கோ.."என்று சொல்லவும்..
"அவசரமில்லை..நீங்கள் ஆறுதலாகச் சாப்பிடுங்கோ" என்றார் சீலன் அண்ணா.
சற்று நேரத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட நானும் தேவமித்திரனும் சாப்பிடுவதற்காக அமர்ந்துகொண்டோம்.
எங்களுக்கு உணவு பரிமாறுவதற்காக பார்கவி வரவும்
"கவி...நாங்களே போட்டுச்சாப்பிடுறம் நீ கொஞ்சம் ஓய்வாக இரம்மா " என்றார் தேவமித்திரன்.
வெளியே வெடிச்சிரிப்பு ஒன்று கிளம்பியது.
நான் தேவமித்திரனிடம்
"ஏன் அப்பிடிச் சொன்னனீங்கள்?" எனவும்
அவர் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினார்.
பிள்ளைகள் மூவரும் சீலன் அண்ணாவின் சின்னவருடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஒரு கவளம் உணவை உருட்டி சாப்பிடப்போனவர் எனக்குத் தீத்திவிட்டார்.
அவ்வளவுதான்....வெளியே கேட்ட பேச்சொலியில் அவசரமாக எழுந்து கொண்ட தேவமித்திரனைத் தொடர்ந்து நானும் எழுந்தேன்.
"ஐயா...தேவமித்திரன் எண்டுறது..."
"ஓம்..மகன்தான் ..சொல்லுங்கோ.." மாமாவின் குரல் தெளிவாகவே கேட்டது.
"ஆள் நிக்கிறாரோ? "
"அவர்...அவர்..சாப்பிடுறார் தம்பி..இருங்கோ.."
மாமா சொல்லிக்கொண்டிருக்கும்போதே நாங்களும் வெளியே வந்துவிட்டோம்.
"நான்தான்....சொல்லுங்கோ.."கம்பீரமாக சொன்ன தேவமித்திரனை நாங்கள் எல்லோருமே நிமிர்ந்துதான் பார்த்தோம்.
"நீங்கள் ஒருக்கா எங்கட இடத்துக்கு விசாரணைக்கு வரவேணும்..."
"நீங்கள்?"
"நாங்கள் விசேட இராணுவப்புலனாய்வாளர்கள்..."
"என்..ன...என்ன விசாரணை..?" மாமா பதற்றமாகக் கேட்க
"அப்பா..பதறாதேங்கோ...ஒண்டும் இல்லை .."என்றபடி அவர்களின் ஆதார அட்டைகளை வாங்கிப்பார்த்த தேமித்திரன்
சரி..வாறன்...என்றுவிட்டு அறைக்குச் செல்லஇ
பின்னாலேயே ஓடிய நான் அவரை இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டேன்.
"சமர்...நீ ஒண்டும் யோசிக்காதை அது நான் உடனே வந்திடுவன்..அப்பாவைப் பார்த்துக்கொள்.." என்றார்.
வேறு எதுவும் கேட்கத் தோன்றவும் இல்லை எனக்கு.
படலையை விட்டு அவர்களுடன் தேவமித்திரன் செல்லவும்
"கடவுளே..பிள்ளை சாப்பிடவும் இல்லை..." பாமதி அக்காதான் உரத்த குரலில் சொல்லி அழுதா.
"கடைசியில் அவ்வளவு மனப்பதற்றமும் இதற்குத்தானா..."என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
கருத்துகள் இல்லை