வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்.!


நான்கு நாட்களுக்கு முன்பு சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. 


இவர்தான் பிரபகாகரனுக்குப் பின்னான அரசியல் வழிகாட்டி, பிதாமகன் என்று உள்ளூர் செம்புகளாலும் பிராந்திய/ மேற்குலக சக்திகளாலும் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட போலி பிம்பம். இன்று அவர்களே கைவிட்டு விட்டார்கள். ஏனென்றால்  அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு அடிமை தேவைப்பட்டது. பயன்படுத்திக் கொண்டார்கள். அவ்வளவுதான்.


வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால்  இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.


புலிகளை விடுவோம் - நேற்றுக் கூட 38 வருடங்களுக்கும் முன்பு வெடித்த மில்லர் தொடக்கம் பதினாறு வருடங்களுக்கு முன்பு வானேறிய ரூபன்/சிரித்திரன் வரை கரும்புலிகளை மக்கள் நினைவு கூர்ந்து உருகியிருந்தார்கள்.


ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம்  சிவனேசன், ரவிராஜ் உட்பட  எண்ணற்ற அரசியல்வாதிகளை  மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன?


 'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை. 


நாளை 'சுமந்திரன்' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.