முன்னாள் இராணுவ அதிகாரி கைது!
நான்கு கொலைகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகமவில் முன்னாள் சிறை அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பொரளையில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவம் உட்பட நான்கு கொலைகளில் தொடர்புடையதாக அவர் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 07ஆம் திகதியன்று பொரளையின் சிறிசர உயன பகுதியில் இரண்டு இளைஞர்களைக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர், அம்பாறையின் சியம்பலாண்டுவ பகுதியில் இருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுரவில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமின் கூட்டு சிறப்பு நடவடிக்கைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, குறித்த சந்தேக நபர் நேற்று அந்தப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று பண்டாரகம, துனோதிய பாலத்திற்கு அருகில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் கோடகொடவின் கொலையிலும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், ஓகஸ்ட் 27ஆம் திகதியன்று பாணந்துறை தெற்கு, அலுபோகஹவத்த பகுதியில் 'குடு நிலங்க'வின் மாமனார் கொலையிலும் அவரே ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஓகஸ்ட் மாதத்திற்குள் மட்டும் மூன்று சந்தர்ப்பங்களில் சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 10 ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர், 2015ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்றும், ‘குடு சலிந்து’, ‘தெஹிபலே ஐயா’, ‘தெஹிபலே மல்லி’ மற்றும் ‘வெலிகம சஹான்’ உள்ளிட்ட பாதாள உலக குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தங்கள் வாடகைக் கொலையாளியாகச் செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் தமன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை