ஜனாதிபதியின் தலைமையில் 159 ஆவது பொலிஸ் தின நிகழ்வு!
எந்தவொரு குற்றத்தையும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்க மாட்டேன்
பொதுமக்களின் மரியாதை, நம்பிக்கை மற்றும் நெருக்கம் கொண்ட நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்க கைகோர்ப்போம்
- ஜனாதிபதி
எந்தவொரு குற்றமும் காலத்தின் போக்கில் மறைக்கப்பட இடமளிக்கப் போவதில்லை எனவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதில் காலம் ஒரு தடையல்ல என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குற்றத்திற்கான தண்டனை எப்போது, எங்கு வழங்கப்படும் என்ற பாகுபாடு பாராது தண்டனை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
"சட்டத்தைப் பேணுவோம் - சமாதானத்தைப் போற்றுவோம்" என்ற தொனிப்பொருளில் திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் நேற்று (03) பிற்பகல் நடைபெற்ற 159 ஆவது பொலிஸ் தின நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இன்று சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கும் பெரும் பொறுப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தங்கள் கடமைகளை முறையாகச் செய்யும் பொலிஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்காக அச்சமின்றி முன்வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
மேலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்திய ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும், புதிய தொழில்நுட்ப அறிவைக் கொண்ட நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
முதலாவது பொலிஸ்மா அதிபராக ஸ்ரீமத் ஜீ.டப்ளியு.ஆர். கெம்பல் நியமிக்கப்பட்ட 1866 செப்டம்பர் 3 ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியில் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்ட தினமாக கருதப்படுகிறது.
159 ஆண்டுகளாக இலங்கை சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு பொலிஸ் கடந்து வந்த பாதையில் சாதார பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கையிலும் யுத்த கடமைகளில் ஈடுபட்டிருக்கையிலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும், சிறப்பான சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும், இந்த விசேடமான தினத்தில் பெருமையுடன் நினைவு கூரப்படுகின்றனர்.
159 ஆவது பொலிஸ் தின நினைவு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கை பொலிஸின் மரியாதைக்கு மத்தியில் கௌரவமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை பார்வையிடவும் ஜனாதிபதி இணைந்தார்.
இலங்கை பொலிஸின் நற்பெயரை மேம்படுத்தி வீரதீரக் கடமைகளைச் செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் வீரப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது:
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் பெரியளவில் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உட்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம். அந்த மரியாதையும் பாராட்டும் நமது நாட்டில் ஒரு பெருமைமிக்க பொலிஸ் திணைக்களமொன்றை உருவாக்குவதற்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது. அந்தப் பாராட்டு மற்றும் மரியாதைகளைப் போன்றே பொலிஸ் திணைக்களம் சில விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் இல்லை. எனவே,இந்தத் திணைக்களத்தின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் உறுதியுடன் பாதுகாப்பதும், பொதுமக்களின் பாதுகாப்பையும் நாட்டின் பாதுகாப்பையும் உறுதியுடன் உழைப்பதும் தற்போது பொலிஸ் திணைக்களத்தில் பணிபுரியும் அனைவரினதும் பொறுப்பாகும்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் உட்பட நீங்கள் அனைவரும், முழுப் பொலிஸ் திணைக்களத்தின் மரியாதையையும் கண்ணியத்தையும் மீண்டும் பெற கடுமையாக உழைப்பீர்கள் என்று நம்புகிறேன். பொலிஸ் திணைக்களத்தைப் பற்றி வெளியிடப்படும் சில செய்திகள் அவ்வளவு சாதகமான செய்திகள் அல்ல என்பதை நாங்கள் அறிவோம்.பொலிஸில் பணியாற்றும் சுமார் 84,000 பேரில் ஒரு சிலர் செய்யும் விடயங்கள் முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் எந்தவொரு சமூக விரோத, சட்டவிரோத செயலும் முழு பொலிஸ் திணைக்களத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் பொலிஸ் திணைக்களம் மிகவும் வலிமையான பொலிஸ் திணைக்களமாகும். இலங்கையில் எந்தவொரு சர்ச்சைக்குரிய சம்பவத்தையும் மிக விரைவாக விசாரித்து சந்தேக நபர்களைக் கைது செய்ய உங்களால் முடிந்துள்ளது. அதனால்தான் எங்களிடம் மிகவும் திறமையான பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர். திறமை மட்டுமன்றி, உங்கள் முன் உள்ள சவால்களை துணிச்சலுடன் சமாளிக்கும் தைரியமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் உள்ளது. இருப்பினும், நம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய கொலைகள் மற்றும் குற்றங்கள் உள்ளன. பொலிஸ் திணைக்களத்தின் குறைபாட்டினால் அந்தக் கொலைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கண்டுபிடிக்க முடியவில்லையா?அதனை நான் எந்த வகையிலும் நம்பவில்லை. நம் நாட்டில் கண்டுபிடிக்க முடியாத குற்றங்கள் அல்லது கொலைகளை கண்டுபிடிக்க முடியாதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களத்தின் திறமையின்மை அல்லது அர்ப்பணிப்பின்மை என்பன காரணமில்லை. கண்டுபிடிக்க முடியாத ஒவ்வொரு குற்றத்திற்கும் பின்னால், அரசியல் சக்தி இருந்தது.
பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் அந்த விசாரணைகளைத் தொடங்க எவ்வளவு முயன்றாலும், அரசியல் சக்தி அவற்றை முறியடித்த வரலாறு நம் நாட்டில் உள்ளது. அவற்றை தடுத்தது மட்டுமல்லாமல், அந்த விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பின்தொடர்ந்து பழிவாங்கும் கலாச்சாரமும் இருந்தது. முறையாக கடமையைச் செய்வது பழிவாங்கலுக்கான காரணமாக மாறிய வரலாறு உள்ளது. எங்கள் அரசாங்கத்தின் கீழ் இதுபோன்ற ஒரு விடயம் நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் உங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் அச்சமின்றி முன்வர வேண்டும்.
மேலும், இந்தக் குற்றங்களும் கொலைகளும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புனிதமானவையாக மாறிவிடுவதாக அவர்கள் சில கருத்துக்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். காலம் அந்தக் கொலைகளில் எதையும் நியாயப்படுத்துவதில்லை. எந்த ஒரு குற்றமும் காலத்தின் போக்கில் புதைக்கப்பட அனுமதிக்கப்படக்கூடாது. அந்தக் குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதால், அந்தக் குற்றங்கள் எந்த விதத்திலும் புனிதத்தன்மை ஆகாது. எனவே, நமது அரசாங்கம் குற்றத்தை எப்போது, எங்கு தண்டிக்க வேண்டும் என்ற பாகுபாடு இல்லாமல் தண்டிக்க செயற்பட்டு வருகிறது. சட்டத்தை நிறைவேற்றுவதற்கு காலம் ஒரு தடையல்ல.
எனவே, பொலிஸ் மா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. இந்த நாட்டு மக்கள் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சமுதாயத்தை இயல்பான நிலையில் பேண உங்கள் சேவை மிகவும் சிறப்பானது. உங்கள் கடமை இல்லாமல் இந்த சமூகம் இப்படி இருந்திருக்காது. எனவே, சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உங்கள் பங்கு மிகவும் முக்கியமானது. இன்று, நம் நாடு ஒரு பெரிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நகரங்களில் மட்டுமே காணப்பட்ட போதைப்பொருள் அச்சுறுத்தல், இப்போது தொலைதூர கிராமங்களையும் சூழ்ந்துள்ளது. இன்று, நம் பிள்ளைகள் போதைப்பொருட்களுக்கு பலியாகிவிட்டனர். இது இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து, ஏராளமான குடும்பங்களை வறுமையின் ஆழத்திற்குத் தள்ளியுள்ளது. இந்த விடயத்தில் அரசியல் தலையீடு இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரசாங்கத்தின் மிக முக்கியமான நிறுவனங்களின் தலைவர்களின் தலையீடு இருந்ததை நாம் அறிவோம். மேலும், இதற்கு ஒரு சிலகாவல்துறை அதிகாரிகளின் ஆதரவும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அச்சுறுத்தலுக்கு எதிராக செயல்படவே நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த பொறுப்பை ஒரு சிலர் புறக்கணித்துவிட்டனர் என்பதை தயக்கத்துடனேனும் கூறித்தான் ஆக வேண்டும். எனவே, அதிகாரிகள் அந்த பழைய பழக்கத்தை கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், நீங்கள் பணியில் இருந்து இராஜினாமா செய்யுங்கள். நீங்கள் அதை தானாக முன்வந்து செய்யவில்லை என்றால், உங்களை பணிநீக்கம் செய்வது குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். ஒவ்வொரு திணைக்களத்திற்கும் உரிய கௌரவத்தை நாம் நிலைநாட்ட வேண்டும்.
நீங்கள் ஒரு சாதாரண பிரஜை அல்ல.இந்த சமூகத்தின் நலனுக்கான முழு சுமையையும் உங்கள் தோள்களில் சுமந்துள்ளீர்கள். எங்கள் நாட்டு மக்கள் உங்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பார்க்கிறார்கள். நீங்கள் அதை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. நீங்கள் பெறும் சம்பளம் போதாது என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் வாழ்க்கையைத் தக்கவைக்க போதுமான சம்பளம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அதற்காக சில சம்பள உயர்வை வழங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல கட்டங்களில் அந்த சம்பள உயர்வைப் பெறுவீர்கள்.
நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதன் மூலம் அமைதியான நாட்டைக் கட்டியெழுப்பினால், நாட்டை விரைவான வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் ஆற்றல் நமக்கு உள்ளது. குற்றங்கள் இல்லாத, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் ஒரு நாடு பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும். அந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு நாடாக நாம் அடையும் பொருளாதார வெற்றிகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கு வழங்குவோம். இதன் விளைவாக, நீங்கள் பெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கும், இதனால் நீங்கள் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ முடியும்.
மேலும், நீங்கள் மிகவும் கடினமான கடமைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். 8 மணி நேரத்திற்கு பதிலாக 14-16 மணி நேரம் வேலை செய்யும் அதிகாரிகள் உள்ளனர். மேலும், அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நாங்கள் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். மேலும், ஒத்துழைப்பு சேவைகளுக்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளை இணைக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். எனவே, உங்கள் சிரமங்களைப் போக்க எண்ணிக்கை அதிகரிப்புகளைச் செய்கிறோம்.
மேலும், தற்கால பொலிஸார் இனியும் சந்திகளில் நின்று தடியடி நடத்துபவர்கள் அல்ல. பொலிஸின் இயல்பு மாறவில்லை என்றாலும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியலால் ஏற்பட்ட சாதனைகளால் கடமைகளைச் செய்யும் மாதிரிகள் மாறிவிட்டன. இன்று, தொழில்நுட்பத்தின் மூலம் பல விடயங்கள் சாதிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசாங்கமாக, நாங்கள் அதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். டிஜிட்டல் மயமாக்கலில் நமது நாட்டை வலுவான நாடாக மாற்றுவதே எமது குறிக்கோள். அதற்காக, பொலிஸ் திணைக்களத்திற்க புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
நமக்கு நவீனமயப்படுத்தப்பட்ட பொலிஸ் அவசியம். சர்வதேச தரத்திற்கு இணையான மற்றும் தொழில்முறை மரியாதையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு காவல் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். அதற்குத் தேவையான தொழில்நுட்பம், அறிவு மற்றும் பயிற்சியை நாங்கள் வழங்கி வருகிறோம். மனப்பாங்கு மாற்றத்துடன் நாங்கள் பணியாற்றுவோம். பொதுமக்களுக்கு நெருக்கமான பொலிஸ் திணைக்களம் ஒன்று நமக்குத் தேவை. அந்த நவீன பொலிஸ் திணைக்களத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று நான் அழைப்பு விடுக்கின்றேன். கெளரவம், நம்பிக்கை மற்றும் மக்கள் நெருக்கத்தை உருவாக்கிய பொலிஸ் திணைக்களமாக 160 ஆவது பொலிஸ் தினத்தை நாம் கொண்டாடுவோம்'' என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் முப்படைகளின் தளபதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட இலங்கை பொலிஸின் பல சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை