பிலியந்தலை மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு ஜனாதிபதி செயலகத்தில்!
பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத் தொடருடன் இணைந்ததாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி திட்டத்துடன் இணைந்து, பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம், அத்துடன் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் எண்ணக்கரு ரீதியான பெறுமதி மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் பற்றிய புரிதலைப் பெற வாய்ப்பு கிடைத்தது.
பிலியந்தலை மத்திய கல்லூரி மாணவர் பாராளுமன்றத்திற்கு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இந்த நிகழ்வில் மாணவர் பாராளுமன்ற அமைச்சரவை மற்றும் உறுப்பினர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, இலங்கை பாராளுமன்றத்தின் சட்டமன்ற சேவைகள் மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயலத் பெரேரா மற்றும் பிலியந்தலை மத்திய கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை