யாழில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்கான கலந்துரையாடல்!📸


யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (04.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள், யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீராக உள்ளதையும், தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார். மேலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


இக்கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துரைகளை முன்வைத்தனர்.


கலந்துரையாடலின் பின் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:


1. செப்டம்பர் 08 முதல் 12 வரை – பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு கூட்டங்களையும், கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்டக் கூட்டங்களையும் நடத்துதல்.


2. டெங்கு விழிப்புணர்வு வாரம் (செப்டம்பர் 14–17) – 14ஆம் திகதி வணக்கஸ்தலங்களில், 15ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களில், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் நடத்துதல்.


3. விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினங்கள் (செப்டம்பர் 22–24) – வீடுகள், பாடசாலைகள், அரச–தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் சுத்திகரிப்பு சிரமதானங்கள் நடாத்துதல். வெளிநாடுகளில் குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்பில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம் எனவும் ஆராயப்பட்டது.


4. திண்மக் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதை உறுதிப்படுத்துதல்.


இக் கூட்டத்தில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பொலிஸ், கடற்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.