வடக்கு மாகாண ஆளுநர் மழைக்காலத்தில் எச்சரிக்கை வலியுறுத்தல்!
வடக்கு மாகாணத்தின் மாதாந்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் (03.09.2025) யாழ்ப்பாண ஆளுநர் செயலகத்தில், கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் தொடக்க உரையில் ஆளுநர், வரவிருக்கும் பருவமழைக்கு முன்பாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை அவசரமாக துப்புரவு செய்ய வேண்டும் என்றும், கடந்த ஆண்டு வெள்ள இடர்பாதிப்புகளை கருத்தில் கொண்டு சட்டவிரோத கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கைகளில் அனைத்துச் செயலாளர்களும் தீவிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், வீதிகள் அமைப்பதில் தரநிலைகள் பின்பற்றப்பட வேண்டும், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மக்களின் தேவைகளின் அடிப்படையில் வீதித் திருத்தங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு ஒரு மாதம் கழித்து பதில் தரும் நிலை தவறானது என்றும், அன்றே பதிலளிக்கும் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். திணைக்களத் தலைவர்கள் தங்களின் துறைக்கான தகவல்களை உடனுக்குடன் கையிலேயே வைத்திருக்க வேண்டும், மக்களின் மனங்களை வெல்லும் வகையில் சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆளுநர், “மாகாண அபிவிருத்தி என்பது கட்டிடங்கள் அல்லது வீதிகள் அமைப்பதாலேயே நிர்ணயிக்கப்படுவதில்லை; மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதே எமது குறிக்கோள்” எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதத்தில் செயற்பட வேண்டும் என்றும், சோலை வரி மீளாய்வு அனைத்துச் சபைகளாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை நடத்திய நடமாடும் சேவை முன்மாதிரி நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றும், ஏனைய சபைகளும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில், உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.
இதன் பின்னர் கட்டாக்காலி நாய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகள் நீடிக்கும் எனவும், நெடுந்தீவில் ஆரம்பித்து ஒவ்வொரு மாவட்ட, நகரங்களிலும் முன்னெடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், அமைச்சுச் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), திணைக்களப் பணிப்பாளர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை