அமெரிக்கா கத்தாருக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகை தகவல்!
கத்தார் தலைநகரான டோஹாவில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், ஹமாஸ் உயர்மட்டத் தலைவர்களை இலக்கு வைத்து கொலை முயற்சித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது, அதேசமயம் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை கருத்துத் தெரிவிக்கையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தவுள்ளது குறித்து கத்தாருக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். அமெரிக்க இராணுவத்தால் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஹமாஸ் “மிகவும் துரதிஷ்டவசமாக கத்தாரின் தலைநகரான தோஹாவின் ஒரு பகுதியில்" அமைந்திருந்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடும், அமைதியை ஏற்படுத்த எங்களுடன் மிகவும் கடுமையாக உழைத்து, துணிச்சலாக ஆபத்துக்களை எடுக்கும் ஒரு இறையாண்மை கொண்ட நாடான கத்தாரின் உள்ளே தன்னிச்சையாக குண்டுவீசுவது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் இலக்குகளை மேம்படுத்தாது," என்று அவர் கூறினார். "இருப்பினும், காஸாவில் வாழும் மக்களின் துயரங்களில் இருந்து இலாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்காகும்." என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை