அரச நிதி வீண்வழங்கு – ஊழியர், மாணவர் நலன்கள் புறக்கணிப்பு!

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்கள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்குக் கடிதம் – உடனடி நடவடிக்கைக்கான கோரிக்கை.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் முறையற்ற நியமனங்கள், நிர்வாக துஸ்பிரயோகங்கள், ஊழல்கள், நிதி விரயம், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான உரிமை மீறல்கள் ஆகிய விடயங்கள் தொடர்பாக அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு விரிவான அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.


சங்கம் தெரிவித்ததாவது:


நிர்வாகத் தவறுகள் – மாணவர்கள், ஊழியர்கள் பாதிப்பு


350-க்கும் மேற்பட்ட நிரந்தர ஆளணி வெற்றிடங்கள் காலியாக இருந்தபோதும், பல்கலைக்கழக நிர்வாகம் அவற்றை நிரப்புவதற்கான எந்த முயற்சியும் முன்வைக்கவில்லை.


அதே நேரத்தில், 200-க்கும் மேற்பட்ட நபர்கள் ஓர் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமனக் கடிதம் இன்றியே, 01–07 ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பரீட்சைகள், அலுவலக சாவிகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் போன்ற இரகசிய கடமைகளிலும் இவ்வாறு நியமிக்கப்பட்ட நபர்கள் ஈடுபடுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


குறித்த தனியார் நிறுவனத்திற்கு மாதாந்தம் ரூபா 5 இலட்சத்திற்கும் மேல் மேந்தலைச் செலவாக வழங்கப்படுகின்றது, ஆனால் வேலைகளின் பெரும்பங்கு பல்கலைக்கழக ஊழியர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது.


அரச நிதி வீண்வழங்கு – ஊழியர், மாணவர் நலன்கள் புறக்கணிப்பு


துப்பரவு, பாதுகாப்பு, கொள்வனவு ஆகிய பிரிவுகளுக்கு பெருமளவு நிதி செலவிடப்பட்டும், சேவை தரம் மிகவும் தாழ்வாக உள்ளது.


சாதாரண ஊழியர்களின் ஓய்வறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில், சில அலுவலகங்கள் ஆடம்பரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.


சம்பளப் படியேற்றம், பதவி உயர்வு, கொடுப்பனவுகள் ஆகியவை திட்டமிட்டு தாமதப்படுத்தப்படுகின்றன; சில ஊழியர்கள் மீது பழிவாங்கும் செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.


மாணவர்களுக்கு மீறல் – நியாயமற்ற கட்டுப்பாடுகள், கட்டணங்கள்


விரிவுரைகள், விடுதிகள், சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளுக்கு நிதி போதுமான அளவில் ஒதுக்கப்படவில்லை.


பரீட்சை பெறுபேறுகள் தாமதப்படுத்துதல், ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீட்டித்தல் போன்றவை மாணவர்களை பழிவாங்கும் முயற்சிகளாகக் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


பட்டமளிப்பு விழா பெயரில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, அவை ஆவணமற்ற செலவுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.


முறைகேடுகள் மறைக்கப்படுகின்றன – விசாரணைகள் தாமதம்


கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற மரங்கள் திருட்டு, அக்கிரம வேலைகள் மற்றும் நிர்வாக ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்படவில்லை.


வழக்குகளை வெற்றிகரமாக நடத்த தேவையான ஆவணங்களை நிர்வாகம் வழங்காததால் பல்கலைக்கழகம் நிதி இழப்புக்குள்ளாகியுள்ளது.


கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் பெற்றவர்களை பல்கலைக்கழகம் சலுகைகள் வழங்கி மௌனப்படுத்துகிறது என சங்கம் குற்றம் சாட்டுகிறது.


சங்கத்தின் முயற்சிகள் – ஆனால் தீர்வுகள் இல்லை


துணைவேந்தர் 23/10/2025 அன்று இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்குவதாக உறுதி தெரிவித்த போதும், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.


இதனால் சங்கம் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி தலையீட்டுக்கான கோரிக்கை


சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது:


1. முறையற்ற நியமனங்கள் மற்றும் நிர்வாக ஊழல்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2. பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.


3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட திணைக்களங்களுக்கு முழு அதிகாரம் வழங்கி விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.


4. சங்கம் திரட்டியுள்ள அனைத்து ஆதாரங்களையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


“ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் உங்கள் பயணத்தில் நாமும் இணைகிறோம்” – சங்கம்


சங்கம் தனது கடிதத்தின் முடிவில்,

“மக்களுக்கான சேவைகளை வினைத்திறனுடன் வழங்குதல் மற்றும் ஊழலற்ற நாட்டை உருவாக்குதல் என்ற ஜனாதிபதியின் நோக்கில் நாமும் பங்காளிகள்”

என்று வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.