யாழ் அரசாங்க அதிபர் ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு!📸
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக, ஐக்கிய கிராமிய உத்தியோகத்தர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அரசாங்க அதிபருக்கும் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15.12.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது, வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூ.25,000 கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் கிராம அலுவலர்கள் எதிர்நோக்கி வரும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து விரிவாக அரசாங்க அதிபருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதேபோன்று, கலந்து கொண்ட கிராம அலுவலர்கள் தத்தமது பிரதேச செயலக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றிற்கான தீர்வுகள் மற்றும் தேவைகள் தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்தனர். ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளால் உருவாகியுள்ள அதிருப்தி நிலைமையையும் அவர்கள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டம் யுத்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் எனக் குறிப்பிட்டதுடன், இத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் கிராம அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவதாக பாராட்டினார். யுத்தகால இடப்பெயர்வு, சுனாமி, கொரோனா தொற்று, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தற்போதைய வெள்ள அனர்த்தம் போன்ற பல நெருக்கடிகளின் போது, பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மக்கள் மத்தியில் நின்று மக்களுக்காக பணியாற்றியுள்ளனர் என்றும் அவர் நினைவூட்டினார்.
மேலும், இவ்வனர்த்த சூழ்நிலையிலும் கிராம உத்தியோகத்தர்கள் சிறப்பாக சேவையாற்றுவார்கள் என்ற நம்பிக்கையையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதே அரசின் பிரதான நோக்கம் எனவும், அதுவே அனைவரின் பொது கரிசனையாகவும் இருப்பதாகக் கூறினார். மாவட்ட ரீதியாக ஒரே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நடைமுறை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் கிராம அலுவலர்கள் இரவு பகல் பாராது சேவையாற்றி வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர், சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக ஒட்டுமொத்த உத்தியோகத்தர்களும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது எனவும் கவலை தெரிவித்தார். எனவே, சரியான பயனாளிகளுக்கு மட்டுமே கொடுப்பனவு சென்றடைய தேவையான நடவடிக்கைகளை அனைவரும் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாகவே கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அரசாங்க அதிபர் தெளிவுபடுத்தினார்.








.jpeg
)





கருத்துகள் இல்லை