அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டம்-முல்லைத்தீவு!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க தலைமையில், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தியை மையமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (11) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி, ‘டித்வா’ புயலால் கடுமையாக சேதமடைந்துள்ள வீதிகள் மற்றும் பாலங்களின் புனரமைப்பு, முல்லைத்தீவு நகரமயமாக்கல் மற்றும் அதன் முக்கியத்துவம், போக்குவரத்து சேவைகளின் மேம்பாடு, கொழும்புக்கான அதிசொகுசு பேருந்து சேவையை விஸ்தரித்தல், மாவட்டத்தின் முக்கிய நகரங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து அமைச்சர் அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிராமிய வீதிகள் புனரமைப்பிற்காக முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததுடன், குறித்த வேலைத்திட்டத்தின் செயல்படுத்தல் தொடர்பாக விளக்கமளித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், முல்லைத்தீவு மாவட்ட நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்டவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கூட்டம் நிறைவடைந்த பின்னர், முல்லைத்தீவு நகரப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய பேருந்து நிலையத்தை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டதுடன், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இவ்விசேட கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திலகநாதன், ரவிகரன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுசா முருகேசன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களங்களின் பொறியியலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை