சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று!📸

 


யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் இன்று (வியாழக்கிழமை 12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில், உறவினர்களின் போராட்ட மனநிலைக்கு மத்தியில் நடைபெற்றது.


இறப்பு வீட்டிலிருந்து உடல் மயானத்துக்குக் கொண்டு செல்லப்படும் வரை, 20 பேருக்குள் மட்டுமே பங்கேற்பு இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தினர். சுமார் 15 பேர் பெண்களும் சிறுவர்களும்; ஆண்கள் வெறும் ஐந்து பேர் மட்டுமே.


இறப்பு வீடு முதல் சுடலை வரை கடுமையான கண்காணிப்பு நிலவியது. மூன்று பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த வாகனங்கள் சுற்றியிருந்தன. சுடலை வாசலிலிருந்து உடலை பெண்களே இணைந்து சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. “ஏன் யாரும் வரவில்லை?” என்ற கேள்விக்கு, குடும்பத்தினர் ஒரே பதில்தான் கூறினார்கள் — அச்சம்.


இந்த குடும்பம் ஒடுக்கப்பட்ட சாதிய பின்னணியைக் கொண்டது. பொருளாதார ரீதியாகவும் நலிவுற்றது. குடும்பத்தில் மூத்தவன் இந்தச் சிறுவனே. கீழே தரம் 09ல் படிக்கும் ஒரு தம்பி. மேலும் நான்கு பெண் குழந்தைகள்.


சரி–பிழை விவாதங்களைத் தாண்டி, ஒரு சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.

அவரின் இறுதிச்சடங்கில் சமூகத்தின் பிரதிநிதிகள் எங்கே?

எத்தனை கட்சிகள்? எத்தனை எம்பிகள்? எத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள்? எத்தனை முற்போக்கு அமைப்புகள்? எத்தனை முற்போக்குவாதிகள்? நவீன அம்பேத்கர்கள் 

ஒருவராவது வந்தார்களா?


ஒடுக்குமுறைக்குள்ளாகும் குரலற்றவர்களின் குரலாக நிற்பதே அரசியல் அல்லவா?

அதுவே அறம் !


#jaffanshooting #ayuprajarul

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.