இலங்கையில் மிதக்கும் ஈரானியர்களின் சடலங்கள்?


ஈரானியக் கப்பலில் இருந்த பணியாளர்கள் என சந்தேகிக்கப்படும் பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.


"இது எமது கடல் எல்லைக்கு அப்பால் நடந்திருந்தாலும், எமது தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்குள்ளேயே அமைகிறது. சர்வதேச கடப்பாடுகளின்படி நாங்களே முதன்மையான மீட்புக்குழுவினர் (First Responders) ஆவோம்," என்று அவர் கூறினார்.


"கடலில் மிதந்து கொண்டிருந்தவர்களைக் கண்டெடுத்து மீட்டோம். பின்னர் விசாரித்தபோது அவர்கள் ஈரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றினோம், அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


அந்தப் பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். "நாங்கள் குறித்த பகுதியில் உடல்களைக் கண்டெடுத்ததால், உயிரிழந்தவர்களும் அதே கப்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்," என்றார்.


இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், இலங்கை கடல் எல்லைக்கு வெளியே தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இருப்பினும், தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்படுவதால், இதனை இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது என்று சம்பத் கூறினார். கடற்படை ஆரம்பத்தில் அபாய அழைப்பு வந்த இடத்திற்குச் சென்றபோது, அங்கு கப்பல் எதுவும் காணப்படவில்லை என்றும், எண்ணெய்க் கசிவுகளின் தடயங்கள் மட்டுமே தென்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.


"தேடல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து தொழில்நுட்ப விசாரணைகளை நடத்துவோம். இலங்கை கடற்படை என்ற ரீதியில் இந்த (தாக்குதல் குறித்த) அறிக்கைகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று கூறிய அவர், இச்சம்பவம் இன்னும் ஒரு விபத்தாகவே கருதப்படுவதாகக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.