துணைவேந்தர் பேராசிரியர் தி. வேல்நம்பி அவர்களுக்கு பாராட்டு விழா!


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களுக்கு, அவர் பிறந்த புனித நிலமான புத்தூரில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற உள்ளது.


இவ்விழா, 2026 ஏப்ரல் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, யா/ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி வளாகத்திலுள்ள குமாரசாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குறுகிய காலத்திற்குள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அவரது அன்பர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.


புத்தூர் மண்ணின் மைந்தருமான பேராசிரியர் வேல்நம்பி அவர்கள், ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியின் பழைய மாணவராக மட்டுமன்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக உயர்ந்திருப்பது, அந்தப் பகுதியின் கல்வி மரபிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.


விழா நிகழ்வுகள், புத்தூர் கிழக்கு கிளுவரை ஸ்ரீ காளி அம்பாள் கோவிலில் நடைபெறும் பூசையுடன் ஆரம்பமாகி, மங்கல வாத்தியத்துடன் வரவேற்பு ஊர்வலமாக கல்லூரி வளாகத்திற்குச் சென்றடையும். தொடர்ந்து நிறுவுநர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல், மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், மாணவியரின் வரவேற்பு நடனம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.


இந்நிகழ்வில் மத, சமூக மற்றும் கல்வித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கியஸ்தர்கள் ஆசியுரைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்க உள்ளனர். இந்திய துணைத்தூதரகம், முன்னாள் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.


மேலும், ஆவணப்படம் திரையிடல், “புதுவை நம்பி” சிறப்பு மலர் வெளியீடு, பாராட்டுரைகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நிகழ்வு இறுதியில் நன்றியுரையுடன் நிறைவடையும்.


புத்தூரின் கல்வி மற்றும் பண்பாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெறும் இவ்விழா, ஒரு கல்வியாளரின் சாதனையை மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் பெருமையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.