அதிவேகத் தொடருந்தில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்த இளைஞர்!
ஜெர்மனியில் ஓடும் அதிவேகத் தொடருந்தில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்த இளைஞர்: கழிப்பறையில் பூட்டிவைத்த துணிச்சலான பயணிகள்!
ஜெர்மனியில் ஓடிக்கொண்டிருந்த அதிவேகத் தொடருந்து (ICE) ஒன்றில், இளைஞர் ஒருவர் சிறு வெடிபொருட்களை வெடிக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில், 'பிராங்பேர்ட்' (Frankfurt) நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தத் தொடருந்தில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரெனத் தன்னிடம் இருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்தார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டாலும், உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட சக பயணிகள் அந்த இளைஞரைக் கடுமையாகப் போராடிக் கட்டுப்படுத்தினர். பின்னர் அவரைத் தொடருந்தின் கழிப்பறையில் தள்ளிப் பாதுகாப்பாகப் பூட்டி வைத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இந்தத் திடீர் வெடிவிபத்தில் சுமார் 12 பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர். அவசரகால நடவடிக்கையாகத் தொடருந்தில் பயணம் செய்த 180 பயணிகளும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பிடிபட்ட இளைஞரிடம் இரண்டு கத்திகள் இருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியின் பிரபல நாளிதழான 'பில்ட்' (Bild) வெளியிட்டுள்ள செய்தியின்படி, மக்களைக் கொலை செய்யும் நோக்கத்துடனேயே தான் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அந்த இளைஞர் கூறியதாகத் தெரிகிறது.
தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்திய வெடிபொருட்களில் சிறிய நெகிழி (Plastic) உருண்டைகள் நிரப்பப்பட்டிருந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளூர் வானொலிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த இளைஞரின் பின்னணி மற்றும் இந்தத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. ஒரு மாபெரும் அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தைப் பயணிகளின் துரிதமான மற்றும் துணிச்சலான செயல் தடுத்து நிறுத்தியுள்ளது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
#world #newspaper #Info #germany #trian
தகவல் நன்றி
ஊடகவியலாளர் சிவாசின்னப்பொடி

.jpeg
)





கருத்துகள் இல்லை