நினைவேந்தலுக்கு தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!📸


இறுதிக்கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுதோறும் மே மாதம் 18 ஆம் திகதி தமிழர் தாயகம் மற்றும் உலகெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்விற்கான ஏற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
​தமிழினப் படுகொலை வாரத்தின் தொடக்கத்தை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பிரதான நினைவேந்தல் திடலைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. 

இந்த தூய்மைப் பணியில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
​கஞ்சி தயாரிப்பில் கட்டுப்பாடு
​நினைவேந்தல் வாரத்தில் விநியோகிக்கப்படும் 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' குறித்து ஏற்பாட்டாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

​"போர்க்காலத்தில் மக்கள் அனுபவித்த பசியையும் துயரத்தையும் பிரதிபலிக்கும் குறியீடாகவே இந்த கஞ்சி வழங்கப்படுகிறது. எனவே, இதனைச் சுவையாக்குகிறோம் என்ற பெயரில் கூடுதல் பொருட்களைச் சேர்க்காமல், அன்று மக்கள் உயிர் பிழைக்கப் பயன்படுத்திய அதே முறையான அரிசி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை மட்டும் கொண்டு கஞ்சியைத் தயாரித்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."

​வியாபார நடவடிக்கைகளுக்குத் தடை
​அஞ்சலி செலுத்த வரும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், மே 18 அன்று நினைவு முற்ற வளாகத்திற்குள் எவ்வித வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
​வருகிற மே 18 அன்று நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில், தாயக மக்கள் அனைவரும் எவ்வித பேதமுமின்றி அஞ்சலி திடலுக்கு வருகை தந்து, சுடரேற்றி தங்களின் உணர்வுபூர்வமான அஞ்சலியைச் செலுத்துமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.