3 நாள் பயணமாக டில்லி செல்லும் முதல்வர் விஜய்!


 3 நாள் பயணமாக டில்லி செல்லும் முதல்வர் விஜய்: ஜனாதிபதி, பிரதமர், காங்., தலைவர்களை சந்திக்கிறார்


தமிழக முதல்வர் விஜய் இம்மாத இறுதியில், மூன்று நாள் பயணமாக டில்லி செல்கிறார்.


டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்., மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.


மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், டில்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை முதல்வர் சந்திப்பது மரபு. மேலும், நிதி மற்றும் நிர்வாகரீதியாக மத்திய அரசின் ஒத்துழைப்பும், மாநில முதல்வருக்கு மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, முக்கிய திட்டங்கள் குறித்த கோரிக்கைகளுடன், டில்லியில் உள்ள அதிகார மையங்களை முதல்வர்கள் சந்தித்து வலியுறுத்துவர்.


அந்த வகையில், தமிழக முதல்வர் விஜயின் டில்லி பயணம், இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துவங்கியுள்ளன.


புதிய முதல்வரை வரவேற்க தேவையான ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆலோசனையை துவங்கியுள்ளனர். டில்லி பயணத்தின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார்.


பிரதமர் மோடியை, கடந்த 2014 தேர்தலின்போது கோவையில் விஜய் சந்தித்தது, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, 'நாட்டின் மிகப்பெரிய தலைவரான மோடி என்னை சந்திக்க விரும்பியதால், மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்கிறேன். இந்த சந்திப்புக்கும், அரசியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை' என விஜய் விளக்கம் அளித்தார்.


தற்போது, தமிழக முதல்வர் என்ற பெரிய அந்தஸ்துடன் மோடியை விஜய் சந்திக்கவுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரையும் விஜய் சந்திப்பார் என கூறப்படுகிறது.


இதேபோல, கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரையும் விஜய் சந்திக்கிறார்.


இம்மாத இறுதியில்


விஜயின் டில்லி பயணத்தை தேசிய அளவில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆலோசனையும் காங்.,கில் தொடங்கி உள்ளது.


தன் அரசை ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளின் டில்லி அலுவலகங்களுக்கும் விஜய் சென்று, மா.கம்யூ., பொதுச்செயலர் பேபி, இ.கம்யூ., மூத்த தலைவர் டி.ராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்து, நன்றி தெரிவிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.


முதல்வர் விஜயின் டில்லி பயணம் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கலாம் என்பதால், அதற்கேற்ப ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.


வரும் வியாழன் முதல் டில்லியில், 'பிரிக்ஸ்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வருபவர்களை, பிரதமர் மோடி சந்திக்கிறார். பின், அவரது வெளிநாடு பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பின், வரும் 20ம் தேதிக்கு மேல் தான் பிரதமர் மோடி, டில்லி திரும்புவார்.


எனவே, இம்மாத இறுதியில் தான், முதல்வர் விஜய்க்கு, பிரதமர் மோடியை சந்திப்பதற்கான அனுமதி கிடைக்கும். பிரதமர் அலுவலகம் தரும் தகவலை வைத்தே, விஜயின் டில்லி பயணம் இறுதி செய்யப்படும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.