‘கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன்…’

 

 


இங்கு, கொஞ்சப்பேர் வெளிநாடு, அதாவது, ஐரோப்பிய, அமரிக்க, அவுஸ்ரேலிய நாடுகளுக்குப் போவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 


     ஒரு காலத்தில், 1980, 1990, ஏன் 2000களில் இராணுவக் கெடுபிடிகளால் நம்மண்ணில் நம் இளையோர் வாழமுடியாத ஒரு சூழலில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய ஒரு நெருக்குவாரம் இருந்தது. 


     ஆனால், இப்போது ஓரளவுக்கேனும் வாழக்கூடிய சூழல் நிலவுகிறது. 


     அதனை வைத்து, வாழ்வாக்க நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பது பெரும் கவலையளிக்கிறது. 


      இன்று, பல பெற்றோர் தம் பிள்ளைகளில், “ஒருவனையாவது வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவோம்” என்று ஒற்றைக் காலில் நின்றுகொண்டு தவியாய்த் தவிக்கிறார்கள். 


      இதனால், நான்கு, ஐந்து, ஆறு என ஆண்டுக் கணக்கில் தம் காலத்தை வீணாகக் கழித்துக்கொண்டு இன்று பல இளைஞர்கள் வேலைவெட்டி இல்லாமல் திரிகிறார்கள். 


      ஒரு கட்டத்தில், ஒரு வேலையும் செய்வதற்கு இலாயக்கில்லாதவர்களாக, அதாவது, திறனில்லாதவர்களாக இவர்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்தம் பெற்றோர் கவனத்தில் எடுப்பதில்லை. 


     ‘எடுத்து விடுகிறோம்’ என்று புலத்தில் உள்ள உறவுகள் கூறுவதால்; இவர்கள், அவர்களை நம்பி, ‘இறங்கி விடுவோம்’ என வேலை ஏதும் செய்யாமல் ஆண்டுக் கணக்கில் காத்துக் கிடப்பதோடு பெருந்தொகைப் பணத்தைத் தரகர்களிடம் கொடுத்துவிட்டு விசர் நாய்கள்போல அலைந்து திரிகிறார்கள். 


     ஊரில், வேலைகள் எதனையும் பழகி, அதனைச்செய்து பிழைக்கத் தெரியாதவன், வெளிநாடு சென்று என்ன செய்வான் என்பதை இவ் இளையோரின் பெற்றோரும் சிந்திப்பதில்லை, வெளிநாடுகளில் உள்ள உறவுகளும் யோசிப்பதில்லை! 


     “வெளிநாடு போகிறோம், வெளிநாடு போகிறோம்” என்று சொல்லிக்கொண்டு, ஆண்டுக் கணக்கில் ஒருவன், ஒரு முயற்சியும் செய்யாது வெட்டியாகத் திரிகிறான் என்று சிந்திக்கையில், இவர்களால் இது எப்படி முடிகிறது என்பது பெரும் ஆச்சரியமே! 


     ‘உழுற மாடு எங்கேயும் உழும்’ என்பார்கள் நம் முன்னோர். 


      ‘கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என்று இன்னுமொரு பழமொழி கூறுவார்கள். 


      இப்பழிமொழிகள், வேலைகள் ஏதும் தேடாமல்/ செய்யாமல் வெளிநாட்டுக்குச் செல்ல அணிவகுத்து நிற்கும் எம்மவரின் மனப்பாங்கையும் வாழ்வையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. 


     வெளிநாட்டில் வாழுகிறவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று தெரியாதவர்கள்தான், அங்கு தம் பிள்ளைகளை அனுப்பிவைக்கவும், போகவும் துடியாய்த் துடிக்கிறார்கள். 


     அங்கு சென்ற பிறகுதான், தம்பியவைக்கு வெளிநாட்டு வாழ்க்கையின் விபரம் விலாவாரியாக விளங்கத் தொடங்கும்! 


     அதுவரை யார் விபரித்தாலும், அது விளங்காது! ஏனென்றால், இங்குள்ள பலருக்கு வெளிநாடு செல்வது ஒரு பெருங் கனவு! 


     வெளிநாடு போனதுகள், எப்படா ஊருக்கு வருவம் எண்டு ஏங்கித் தவிக்கிதுகள்! 


     உள்நாட்டில் இருக்கிறதுகள், எப்படா வெளிநாடு போவம் எண்டு ஏக்கத்தில் இருக்கிதுகள்! இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை…!


செ. அன்புராசா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.