ஜனாதிபதி அநுரவின் அரசியல் நிலைப்பாடும் இலங்கையின் எதிர்காலப் பாதையும்: ஓர் அரசியல் அலசல்!
"பதவிக்கு ஆசைப்பட்டு இங்கு வந்த மனிதன் அல்லன் - பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை - மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக எந்தவொரு அபாயத்தையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்"
ஜனாதிபதி அநுரவின் அரசியல் நிலைப்பாடும் இலங்கையின் எதிர்காலப் பாதையும்: ஓர் அரசியல் அலசல்!
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து கடந்து வந்த 79 ஆண்டுகால வரலாற்றில், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த தலைவர்கள் பலர் நாட்டின் நலனை விடத் தங்களது நிறைவேற்று அதிகாரத்தையும், அரச நிறுவனங்களையும் பயன்படுத்தித் தங்களது பதவிகளையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக் கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்திவந்தனர்.
ஆனால், தற்போதைய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் உண்மையான கட்டமைப்பு மாற்றத்திற்காகத் தனது பதவி இழப்பையோ அல்லது உயிர் ஆபத்தையோ எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருப்பது, இலங்கை அரசியலில் ஒரு புதிய விவாதத்தையும் திருப்புமுனையையும் தோற்றுவித்துள்ளது. "பதவிக்கு ஆசைப்பட்டு இங்கு வந்த மனிதன் அல்லன்; மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக எந்தவொரு அபாயத்தையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்" என்று அவர் கூறியிருப்பது, இலங்கையின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் காணப்பட்ட அதிகார மோகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வெளிப்படைத்தன்மையையும் அரசியல் முதிர்ச்சியையும் காட்டுகிறது.
குறிப்பாக, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) 24 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் போது, தமக்குரிய நிறைவேற்று அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு ஒருபோதும் பயன்படுத்தப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியளித்தார்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தின் ஆட்சிக்கும் அரசியலமைப்பு வரம்புகளுக்கும் உட்பட்டே அமையும் என்பதைத் தெளிவுபடுத்திய அவர், நீதித்துறையின் சுயாதீனம் குறித்த சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். மேலும், நாட்டின் மிகச் உணர்வுப்பூர்வமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் தனது சொந்தப் பாதுகாப்புப் பிரிவில் உள்ள அதிகாரிகளையும் உள்ளடக்கித் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தனது உயிருக்கோ அல்லது பதவிக்கோ ஆபத்து ஏற்பட்டாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விலகத் தயார் எனச் சுட்டிக்காட்டியமை அவரது அரசியல் துணிச்சலையும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற கடமைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.
கடந்த 79 ஆண்டுகால ஆட்சியில் இலங்கையை மாறி மாறி ஆண்ட பிரதமர்களோ அல்லது ஜனாதிகளோ இத்தகைய வெளிப்படைத் தன்மையையோ, அதிகாரம் குறித்த சுயவிமர்சனப் பண்பையோ காட்டியதில்லை. அரசியலில் பரிபூரணத் தூய்மைவாதம் (Absolutism) என்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்று என்பதை உணர்ந்து, தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு குறித்த கேள்விகளுக்கு அப்பாற்பட்டு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஏனைய தேசிய இனங்களை மதித்து நாட்டை முன்னோக்கிச் செல்ல வழிவகுப்பது யார் என்பதைக் கணக்கில் எடுக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாகிறது.
இங்கே இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அநுர அரசாங்கத்தை ஆதரிப்பது என்பது அதன் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்மூடித்தனமாக ஏற்பதாக இருக்கக்கூடாது. அதேவேளையில், அரசாங்கத்தை எதிர்ப்பது என்பது கடந்த கால ஊழல் அரசியல் அமைப்புகளை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான அழைப்பாகவும் அமைந்துவிடக்கூடாது.
ஏனெனில், ஜனநாயகத்தின் ஆரோக்கியம் என்பது அரசாங்கத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகிய இரண்டினதும் சமநிலையான உருவாக்கத்திலேயே தங்கியுள்ளது. எனவே, அநுரவின் ஆட்சியை மதிப்பிட வேண்டிய அளவுகோல் “அவர் எங்கள் பக்கம் உள்ளாரா?” என்பதல்ல; மாறாக, “அவர் நாட்டின் அரச நிறுவனங்களை வலுப்படுத்துகிறாரா, சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்துகிறாரா, நிறைவேற்று அதிகாரத்தை வரம்புக்குள் வைத்திருக்கிறாரா?” என்பதே ஆகும்.
அதேபோன்று, தமிழ் பேசும் மக்களின் பார்வையிலும் இந்த அரசியல் மாற்றம் தனித்துவமான முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான முழுமையான அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல் நீக்கம், வடக்கு–கிழக்கின் பொருளாதார வளர்ச்சி, மொழி உரிமைகள் மற்றும் அரசியல் சமத்துவம் போன்ற அடிப்படை விவகாரங்களில் புதிய அரசாங்கம் எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முன்னேற்றங்களைக் காட்டுகிறது என்பதே தமிழர்களின் அரசியல் மதிப்பீட்டின் பிரதான அடிப்படையாக இருக்கும்.
கடந்த கால ஆட்சிகளுடன் ஒப்பிடும்போது, தற்போதைய அரசு குறைந்தபட்சம் இன அடிப்படையிலான அரசியல் பாகுபாட்டைக் குறைத்து, அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க முயல்கிறது என்றால், அதனை விமர்சனத்துடனான ஆதரவோடு அணுகுவது ஜனநாயக ரீதியாக நியாயமான ஒரு நடைமுறையாகும்.
இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில், சிங்கள மக்களாக இருந்தாலும் அல்லது தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் சரி, தற்போதைய ஆட்சியை வீழ்த்த நினைப்பது என்பது இலங்கையை மீண்டும் பழைய பாதாள உலக, நிழல் உலக மற்றும் போதைப்பொருள் சாம்ராஜ்யங்களின் கைகளிலேயே ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
நாட்டின் முன்னாள் நீதி அமைச்சரும், புத்திஜீவியான ஜனாதிபதி சட்டத்தரணியும், அவரது மகனும் (சட்டத்தரணி) பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள பின்னணியில், பழைய அரசியல் கட்டமைப்பின் சீரழிவை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய பாரிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் மீண்டும் பழைய ஊழல் அமைப்பைக் கொண்டுவரத் துடிப்பவர்களிடம் இருந்து மக்கள் விலகிச் சரியான அரசியல் முடிவை எடுக்கத் தவறினால், இலங்கையை எந்த ஒரு சக்தியாலும் காப்பாற்ற முடியாது என்பதே தற்போதைய கள யதார்த்தமாகும்.
#AnuraKumaraDissanayake #SriLanka #SriLankaPolitics #RuleOfLaw #JudicialIndependence #EasterSundayAttacks #Accountability #GoodGovernance #Democracy #TamilPolitics #PoliticalReform #TamilNews #ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #நடராஜா_குருபரன்
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்

.jpeg
)





கருத்துகள் இல்லை