வில்லியே-லு-பெல்லில் மனிதச் சுரண்டல்: ஒரே வீட்டில் 23 படுக்கைகளுடன் சிக்கிய மோசடிப் பேர்வழி!!


பிரான்சின் வால்-துவாஸ் (Val-d'Oise) மாவட்டத்தில் உள்ள வில்லியே-லு-பெல் (Villiers-le-Bel) பகுதியில், சுகாதாரமற்ற சிறிய வீடொன்றில் 23 படுக்கைகளை அமைத்து அப்பாவி மக்களைச் சுரண்டி வந்த வீட்டு உரிமையாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை மோசடிக்காரர்களுக்கு (marchands de sommeil) எதிரான அரசின் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சுமார் 100 சதுர மீட்டர் பரப்பளவே கொண்ட அந்த வீட்டில், பாதாள அறையில் (cave) அடுக்கப்பட்ட மூன்று படுக்கைகள், கூரைக்குக் கீழே (combles) நெருக்கமாகப் போடப்பட்ட மேலும் பல படுக்கைகள் என ஜன்னல்கள் கூட இல்லாத பல இருட்டறைகளில் மொத்தம் 23 படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


வில்லியே-லு-பெல் நகரசபை வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், வால்-துவாஸ் மாவட்ட நிர்வாகத்தின் (Préfecture) உத்தரவின் பேரில், காவல் துறையினர், எல்லைக் காவல் படையினர் மற்றும் பிராந்திய சுகாதார முகவரக (ARS) அதிகாரிகள் இணைந்து அண்மையில் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.


இந்தச் சோதனையின் போது, அங்கு தங்கியிருந்த பல பாகிஸ்தானியர்களை அதிகாரிகள் மீட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் எவ்விதச் சட்டபூர்வ ஆவணங்களுமின்றி (sans-papiers) பிரான்சில் தங்கியிருந்தவர்கள் ஆவர். அவர்களின் கையறு நிலையைப் பயன்படுத்திக்கொண்ட வீட்டு உரிமையாளர், ஒவ்வொரு படுக்கைக்கும் 150 முதல் 200 யூரோக்கள் வரை வாடகையாக அறவிட்டுள்ளார். வீட்டின் இரண்டு சமையலறைகளும் முற்றிலும் சுகாதாரமற்ற நிலையிலும், மின் இணைப்புகள் எந்த நேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபத்தான முறையிலும் இருந்ததாக அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.


இந்தக் கொடூரச் சுரண்டலை அரங்கேற்றிய பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த குறித்த வீட்டு உரிமையாளர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, பொன்துவாஸ் (Pontoise) அரச தரப்பு வழக்கறிஞரின் உத்தரவின் பேரில் காவலில் (garde à vue) வைக்கப்பட்டுள்ளார். மனித மாண்புக்குப் புறம்பான முறையில், அபாயகரமான சூழலில் வீட்டை வாடகைக்கு விட்டமைக்காக அவருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் விரைவில் அரசால் பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வீட்டின் ஆபத்தான மின் இணைப்புகளை 8 நாட்களுக்குள் சீர்செய்ய வேண்டும் என நிர்வாக ரீதியான அவசர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வால்-துவாஸ் மாவட்டத்தில் இவ்வாறான மனிதச் சுரண்டல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக ஏப்ரல் 29ஆம் திகதி கார்ஜ்-லே-கோனஸ் (Garges-lès-Gonesse) பகுதியிலும் இதேபோன்றதொரு சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.


இத்தகைய மோசடிக்காரர்களுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மாத்திரம் 70 நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது, இவ்வாறான குடியிருப்புகளைப் பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நிர்வாக, நிதி மற்றும் நீதித்துறை ரீதியான தடைகளுக்கு வழிவகுக்கும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.