ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு மௌன போராட்டம்’’

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல போராட்டங்கள்

நடந்து வருகையில் கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று மதுரையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்களை காவல் துறையின் அடித்து விரட்டியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர் சிம்புவும் குரல் கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக சற்றுமுன் சிம்பு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
‘‘இது வரை ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லோரும் தனி தனியாக நின்று தான் போராடி வருகிறார்கள்.

இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. உண்மையாக தமிழ் உணர்வுள்ள அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்று கூடி போராட வேண்டும். இது என் கோரிக்கை! இதற்காக நாளை மாலை 5 மணிக்கு நான் என் வீட்டிற்கு முன் கருப்பு சட்டை அணிந்து 10 நிமிடம் மவுனமாக நிற்க போகிறேன். இந்த மௌனப் போராட்டத்தில் பங்குபெற விரும்பும் தமிழ் உணர்வுள்ள அனைவரும் என்னுடன் கை கோர்க்கலாம். வர முடியாதவர்கள் அவரவர் வீட்டுக்கு முன் நின்றோ இல்லை நீங்கள் பணி புரியும் அலுவலகத்திற்கு முன் நின்றோ இல்லை டிராஃபிக்கில் நின்று கூட நீங்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க்லாம். தமிழ் நாடு முழுக்க உள்ள தமிழ் உணர்வாளர்கள் இதுபோன்று செய்யுமனால் இது அரசாங்கத்தின் கவனத்திற்கு செல்லும், அதன் மூலமாவது இதற்கு ஒரு முடிவு ஏற்படலாம்.

இந்த மவுன போராட்டத்தில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தமிழ் பால் குடித்து தமிழகத்தில் வளர்ந்த ஒரு உண்மையான தமிழன் என்ற முறையில் இதனை செய்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிகட்டு விஷயத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் துடைக்கப்பட வேண்டும், தமிழ் கலாசாரம், தமிழர்களின் உணர்வுகள் பேணி காக்க வேண்டும் என்பதற்கே இந்த மௌன போராட்டம்’’ என்றார் சிம்பு!