பிரித்தானியாவில் இளம் கலைஞர்களுடன் பிரமான்டமான இசைகளின் சங்கமம் 2017(படங்கள்)

பிரித்தானியாவில் வாழும் இளம் சமுதாயத்தின் கலை தேவையை உணர்ந்து அவர்களுக்கு களம் அமைக்க ”சிகரத்தின்” ஆதரவில் பல்வேறு இளம் கலைஞர்களின் முயற்சியில் மட்டுமே உருவான இசைகளின் சங்கமம் 2017 நேற்று ”லெதர் லேண்ட்” என்ற இடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

ஈழ தமிழர்களின் மூர்க்கத்தனமான போட்டிகளுக்கு நடுவில் இந்த நிகழ்வும் இடம்பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வானது சிறந்ததொரு நிகழ்வாகவே இருக்கும் என்று எண்ணியபடியே அமர்ந்திருந்தேன் நான்.நிதிப்பற்றாக்குறையில் வாழும் எம் கலையினை ஊக்குவிக்க துடிக்கும் எம்மவர்களை நாம் என்றும் புறம்கூறுதல் ஆகாது. ஆனாலும் என் மனதில் பட்டதை எழுதாமல் செல்வது என் எழுத்தாணிக்கு களங்கம் என்றே எண்ணிக்கொள்கின்றேன்.
மிகவும் அதிக பட்ஷ ரசிகர்களை தன்வசமாக்கிய இசையமைப்பாளர் இமானின் இசை நிகழ்வு இடம்பெற்று இருந்தாலும், அரங்கு நிறைந்த (500 பேர் வரையிலான) மக்களுடன் சிறந்த இளம் குயில்களின் பாடல்கள் அரங்கை அதிர வைத்தது. பாடல்கள் அனைத்திற்கும் பல்லவி இசைக்குழுவே இசையினை வழங்க 16 இல் இருந்து 25 வயதிற்கு உட்பட்ட ஈழ கலைஞர்கள் இந்திய திரைப்பட பாடல்களை வழங்கினார்கள்.
இளம் பெண்களும் ஆண்களும் இசைப்பாடல்களை அழகாக பாட அதற்கான பயிற்சியினை ”வேந்தன்” வழங்கியிருந்தார். அவரது வழிகாட்டலில் இரு இளம்பெண்கள் முதற்தடவையாக மேடை ஏறி பாடியிருந்தார்கள். அவர்களது பாடல் ஓரளவு நன்றாகவே இருந்தது. சில இளம்பெண்களின் பாடல் அதிசிறந்ததாக இருந்தாலும் அதற்கேற்ப இசை சோர்வு ஏற்படவில்லை என்று தான் கூறுவேன். வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள் தான் ”பல்லவி இசைக்குழு” என்றாலும் இசை என்பதில் அதியுயர் அர்ப்பணிப்பு தேவை என்பதே என் விவாதமாகும்.
அதேபோன்று குறுந்தட்டுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் அர்பணிப்பிலான செயற்பாட்டில் ஈடுபடுவது அவசியம். பாடலும் இசையும் ஒன்றுடன் ஒன்று பின்னி இருந்தாலும் நாம் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போது அர்ப்பணிப்புடனும் வார்த்தைகளின் ஆளுமையை உணர்ந்தும் இசையமைக்க வேண்டும். ஒரு பாடல் பாடப்படும் போது அந்த பாடல் வரியின் அர்த்தம் முழுமையாக உணரப்பட்டு அந்த உணர்வானது பாடகரின் குரலில் வெளிவரவேண்டும். அப்போதுதான் அது ரசிகனின் மனதை தொட்டுச்சென்றாலே அது முழுமையடையும் என்பதனை உணர்ந்து அதனை கவனிக்க வேண்டியது இசையமைப்பாளரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, என்பதை இசையமைப்பாளர் உணர வேண்டும். வெளியிடப்பட்ட பாடல்களின் இசையில் ஏதோ ஏற்கனவே கேட்ட பாடலின் பிரதி போலவே தோன்றிய எனது எண்ணத்தை தடுக்க முடியவில்லை.
கலைஞர்களுக்கான மேடையை வழங்கும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பது கலைஞர்களுக்கான எதிர்கால அங்கீகாரம் மட்டுமே. அந்த அங்கீகாரத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால் எமது முழுமையான அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானதொன்றே.முழுமையான அர்ப்பணிப்பு இல்லாத எவருக்கும் மேடை வழங்குவதும் அவர்களுக்கான தயாரிப்பை வேறு ஒருவர் பொறுப்பெடுப்பதும் தேவையற்ற ஒன்றே. ஆகவே தயாரிப்பாளர்களே அதியுயர் திறமையை கொண்ட அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் கலைஞர்களை நீங்களும் சல்லடை போட்டு தேடுவது அவசியமாகும்..
எனது இந்த எழுத்தினால் எதிர்காலத்தில் எனக்கு மேடை கிடைக்காமல் போனாலும் நான் கவலைப்பட போவதில்லை. என்னை பொறுத்தவரை திறமைக்கான அங்கீகாரமாகவே மேடைகள் இருக்க வேண்டும். புதிது புதிதான சிந்தனை தேடல்களும் இசைத்தேடல்களும் அவசியமானதொன்றாகவும் அதுவே அனைத்து கலைஞர்களுக்கும் சவாலாக அமைய வேண்டும். வைரமுத்துவின் பாடல்களுக்கு எப்படி ஒரு முத்துக்குமார் சவாலாக வந்தாரோ அதேபோல ஈழ சினிமாவில் குப்பையாக உள்ள அனைவருக்கும் சவாலான புதிய முகங்கள் களத்தில் இறங்கவேண்டும். ஏற்கனவே துறையில் இருப்பவர்கள் தாம் என்ன செய்தாலும் இவர்கள் ரசிப்பார்கள் என்ற மனநிலையில் புதிய புதிய செயல்வடிவங்களில் ஈடுபடாமல் அரைத்தமாவையே அரைக்கவும் புளிக்கவைக்கவும் விரும்புகின்றார்கள். இவர்களை நாம் ஓரம் செய்து திறமையான கலைஞர்களுக்கு வழியமைக்க உதவிட வேண்டும்.
தமிழில் ஆசைகொண்டு தமிழை வளர்க்க புறப்பட்ட கலைஞர்களுக்கு ஆங்கிலத்தில் நன்றியுரை அவசியமற்ற ஒன்று
புலம்பெயர்தேசங்களில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் அதிகரித்த கேளிக்கை நிகழ்வுகளும் போட்டி, தலைமைத்துவ ஆசை, பெருமை பேசும் எண்ணப்பாடு, என்பவை அதிகரித்து செல்லும் காரணமும் எமது கலை, இலக்கிய வளர்ச்சியை பாரிய சரிவை நோக்கி தள்ளுகின்றது என்பதனை உணர்வது அனைவரதும் கடமையாகும்.
வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள பழைய பாடசாலைகள் என்பவற்றை கணக்கில் எடுப்போமானால் 100 மேற்பட்ட பாடசாலைகள் அடங்கும். இந்த பாடசாலையில் படித்த ஒவ்வொருவரும் தமது பாடசாலை பழையமாணவர் சங்க நிகழ்வு, விளையாட்டுப்போட்டி, கலைநிகழ்வு என்று நடத்திக்கொண்டு இருப்பார்களானால் ஒரு வருடம் போதவே போதாது. அது தவிர ஒவ்வொரு குழுக்களுக்கும் இடையில் காணப்படும் கீழ்த்தர போட்டியினால் தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்களை அழைத்து வந்து தமது பெருமையை காட்ட கேளிக்கை நிகழ்வை நிகழ்த்துவதும், அதிகரித்த தொழில்நுட்ப தொலைக்காட்சிகளால் ஏற்பட்ட நிகழ்ச்சி நிரலின் அதிகரிப்பும், ஈழ மக்களிடையே எமது கலைஞர்கள் பற்றிய சிறப்பை அதிகரிக்க செய்யவிடாமல் போக காரணமானது. திறமையற்ற அனைவருக்கும் மேடை கிடைப்பது இலகுவானதொன்றாக போனதால் மேடை பற்றிய பிரமிப்பு இல்லாமல் அழிந்து போனது.
ஈழ கலைஞர்களின் இந்த நிலை மாறவேண்டும் என்றால் மேடைக்கான விதிமுறைகளும் போட்டியின் தரமும் உயர்வுபெற வேண்டும்.தனிப்பட்ட பாடசாலை நிகழ்வுகளிலும் மாவட்ட பாடசாலை நிகழ்வுகள் அதிகரிக்கப்பட்டு ஒரே மாவட்ட பாடசாலைகளின் ஒற்றுமை தன்மை நிலைநிறுத்தப்பட வேண்டும். புலம்பெயர் தேசத்து நிகழ்ச்சி நிரல்கள் குறைக்கப்பட வேண்டும். தரமான சிறந்த கலைஞர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். உலகளாவிய மக்கள் தேர்வில் மட்டுமே திறமைக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக விருது வழங்குதல், என்று நிகழ்த்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட வேண்டும். நடக்குமா என்ற கனவை தேக்கியபடி

என்றும் அன்புடன்
காவியா