இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்:!

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை சுதந்திரமான அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஜெனீவா கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.

ஜெனீவாவில் நடந்து வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இலங்கையில் 1,46,000 பெண்கள், குழந்தைகள், ஆண்கள் குண்டுவீச்சால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த மிருகத்தனமான படுகொலைகள் சுட்டிக்காட்டும் உண்மை யாதெனில், தமிழர்களின் மனித உரிமைகளை, 1000 அடிக்குக் கீழே சிங்கள அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது.

மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்பு நாடுகளை இரு கரங்களைக் கூப்பி வேண்டுகிறேன். இலங்கை அரசின் மனித உரிமை மீறல் கொடுமைகளை சுதந்திரமான அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின், மனித உரிமை கவுன்சில் கட்டிடத்தில் உள்ள 22-ம் எண் அரங்கத்தில், இலங்கையின் இனப்படுகொலை என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்திற்கு, இலங்கையைச் சேர்ந்த கத்தோலிக்கப் பாதிரியார் ஜெயபாலன் குரூஸ் தலைமை தாங்கினார். அந்த விவாதத்தில் வைகோ பேசியதாவது:-

தமிழர் தாயகம் 26,500 சதுர கிலோ மீட்டராக இருந்தது. தற்போது, 11,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்தான் தமிழர்கள் வாழ்கின்றார்கள். அதிலும் சிங்களக் குடியேற்றம் வேகமாக நடக்கின்றது. ராணுவமே குடியேற்றப்பட்டு விட்டது. 1948-ல், தமிழர்களின் மக்கள் தொகை 32 லட்சமாக இருந்தது. சிங்களர்களின் மக்கள் தொகை 66 லட்சமாக இருந்தது. ஆனால், இன்று நிலைமை என்ன? தமிழர்களின் மக்கள் தொகை 35 லட்சத்தைத் தாண்டவில்லை. ஆனால், சிங்கள மக்கள் தொகை 1 கோடியே 50 லட்சமாக உயர்ந்து விட்டது.

2011 ஜூன் 1-ந் தேதி, பிரஸ்ஸல்ஸ் நகரில், ஐரோப்பிய ஒன்றியக் கட்டிடத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில், தமிழ் ஈழம் அமைவதற்குப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர் தாயகத்திலும், அகிலம் முழுவதிலும் வாழும் ஈழத்தமிழர்களிடமும், ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றேன்.

இந்தக் கருத்தை, அதுவரை தமிழ் ஈழத்தில் இருந்து எவரும் கூறியது இல்லை; தமிழ்நாட்டில் இருந்தும் எவரும் கூறியது இல்லை. பொது வாக்கெடுப்பு நடக்கும். தமிழ் ஈழம் அமையும் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.