அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பில் எவ்வித குறைப்பும் குறையாது!

அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்த அமெரிக்காவின் அரசியல் விவகார உதவிச் இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கை விஜயத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனனுக்கும் இடையிலா சந்திப்பு, இலங்கை நேரப்படி நேற்று (21) பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியவை என, இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான நீண்டகால உறவுகளை நினைவூட்டிய ஜனாதிபதி, அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மூன்று தசாப்த போரின் பின்னர் நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றி பெறுவதற்கும் போர் இடம்பெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்காக அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி, இச்சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உதவி இராஜாங்க செயலாளர், இலங்கையின் அரச நிர்வாகத்தில் மிகச் சிறந்த வெளிநாட்டுக் கொள்ளை தற்போது நிலவுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள நாடென்ற வகையில், இலங்கை பிராந்திய நாடுகளுடன் பேணிவரும் ஒத்துழைப்பு செயற்பாடுகளைப் பாராட்டிய தோமஸ் ஷெனன், அனைத்துச் சகோதர நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி, சிறந்த முன்னுதாரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்து சமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைந்துள்ளதனால் மிகச்சிறந்த நிலையில் இருப்பதுடன் சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் மிகச்சிறந்த தொடர்புகளைப் பேணிக்கொண்டு நடுநிலையான வெளிநாட்டுக் கொள்ளையுடன் முரண்பாடுகள் ஏற்படாதவாறு அனைத்து நட்பு நாடுகளுடனும் சிறந்த இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் தற்போது இலங்கை வெற்றி பெற்றுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், இந்து சமுத்திர பிராந்தியத்தில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காகவும் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மூன்று தசாப்தங்களாக நிலவிய போருக்குப் பின்னர் இலங்கை பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்காவின் ஒத்துழைப்பை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சுற்றுலா, மீன்பிடி மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இன்று இணைந்து செயற்பட்டு முரண்பாடுகளின்றி அரசாங்கதை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.