வரவு செலவுத் திட்டத்துக்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள்?

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்காத நிலையில், வரவு செலவுத் திட்டத்துக்கு ஏன் ஆதரவு வழங்கினீர்கள் என மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் நேற்று (20) தெரிவித்தார்.

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நீதி அமைச்சு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகியவை மீதான குழுவிலை விவாதம் நாடாளுமன்றில் தற்போது நடைபெறுகிறது. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்தது. யுத்தம் நிறைவுக்கு வந்து இன்று வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலில் இருக்கிறது. ஓர் இனத்தை தொடர்ந்தும் ஒடுக்குமுறையில் வைத்திருக்க முற்படுவற்கு விரும்புவதாகவே இது அமைவதாக நினைக்கிறேன்”.

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமுலில் உள்ள காரணத்தினால் வெளிநாட்டில் உள்ள முதலீட்டாளர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயங்குகிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.