விடியல் வேண்டும் ..!

(தர்ஷினி உ்தயராஜா)

வானில் முகில் திரண்டு
வானத்து சூரியனை மறைத்து
காரிருளை தோற்றுவிக்க
கண்ணீரை துடைத்துக்கொண்டு
பட்ட காயத்தை ஆற்றிக்கொண்டு
எழத்துடிக்கிறது ஒரு தேசம்
விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

கந்தகக் காற்றை சுவாசித்து,
கயவர் கையில் அகப்பட்டு,
கம்பிகளின் பின்னால் ஒரு காத்திருப்பு.
காலம் அது கைகூடும். – எம்
வழக்குகள் யாவும் நிறைவு பெறும்.
வெளியேறும் காலம் வந்து விடும்.
அதற்காக, விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

மகனின் பாசத்துக்காய், கணவனின் அன்புக்காய்,
தகப்பனின் கண்டிப்புக்காய், அண்ணனின் பரிவுக்காய்,
மகளின் திருமணத்துக்காய், தாயின் ஸ்பரிசத்துக்காய்,
ஏங்கும் மனங்களில் மிஞ்சி இருப்பது
அவர் நிழற்படங்கள் மட்டுமே.
கண்ணீரோடு காத்திருக்கும் கண்களில்.
ஆனந்தக் கண்ணீர் வராதா ?
அதற்காக விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

சொந்த வீட்டில் சோறாக்க,
சொந்த நிழலில் இளைப்பாற,
சொந்த மண்ணில் உயிரை விட,
இருந்த எங்கள் சொந்த பூமி எங்கே ? ?
இன்று தரிசாக சில இடம்,
அந்நியருக்கு பரிசாக பல இடம்.
எங்கள் இனம் உருத்தெரியாமல் போவதற்குள்,
விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

புனிதர்கள் களமாடிய மண்ணில்
இன்று சில வீணர்கள் அட்டகாசம்.
அவருக்காக வழங்கப்பட்டதல்ல – இந்த மக்களாணை.
என்றதனை புரியவைக்க வேண்டுமல்லோ இந்த வேளை !!
அதற்காக விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

தாயக மண்ணையே நேசித்து,
விடுதலை ஒன்றையே சுவாசித்து,
வீர காவியமாகினர் வீர மறவர்கள்.
அவர் வாழ்ந்து மறைந்த மண்ணில்
இன்று சினிமாக்காரரை நேசித்து,
மது, மாது, புகை, போதை யாசித்து,
எம் இனத்தின் போக்கை மாற்ற முற்படும்
கயவர் கூட்டத்துக்கு துணையாக எம்மவர்.
இவர் மாற, விடியல் வேண்டும் – புது
விடியல் வேண்டும் !

சாணக்கியர் என்பார் சிலர்,
சாதுரியம் என்பார் சிலர்
ராஜதந்திரம் என்பாரும் சிலர்,
இவர் பேச்சில் உள்ளது வேற்று வீரம்.
அவர் செயலில் இல்லை அந்த தீரம்.
வெறும் வீணர்கள் பேச்சில் சிக்குண்டு,
வீண் போக்கிரித்தனத்தில் கட்டுண்டு,
எம்மினத்தின் அடையாளத்தை தொலையாதீர் !
எம் விடுதலை கனவை சிதையாதீர் !!

– தர்ஷினி உ்தயராஜா

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*