புனிதப்பூவே..!

 

கார்த்திகை மாத
காந்தள் பூவே! -புலிக்
காட்டில் பூத்த புன்னகையே!

தமிழீழக் குறிகாட்டியே
தலைநிமிர்ந்து பூத்து
தலைநிமிர்ந்தே மடியும்
நின் குணம்
தமிழ் வம்சத்திற்கேற்ற குணம்.

தமிழீழ எல்லை எங்கும்
தளிர்த்துதிக்கும் பூவே!-ஒளி
தீபமாயும் தீய்க்கும் தீயாயும்
தோன்றித் துலங்கும் பூவே!

எரிமலையை நிகர்த்த பூவே!
எழுந்த நடுவான் சூரியனை
ஒத்த ஒளிப் பூவே!

போர்வீரன் போல் நெருப்புச்
சடைவிரித்த பூவே!
போர்வாள் அடுக்கிய ஆயுதக்
களஞ்சியமாயும்
காட்சி தரும் பூவே!

உறுதிமொழி எடுக்கும் வீரர்
நீட்டிய கரமாய்..அவர் கையில்
நீமிர்ந்த சபதத் தீயாயும்
காட்சி தரும்
கானகப் பூவே!

காட்டுப் பூக்களையும்
போற்ற வைத்த தலைவனின்
இதய ஒளிச்சுடரும் நீயோ?

எத்துணை பேறு பெற்றாய்
கார்த்திகைக் காந்தளே!
மாவீரர் பாதம் போற்றும்
மாவீரப் பூவே!- தமிழீழ
மகுடப் பூவே!
புலிவீரத்தின் புனிதப் பூவே!
எங்கள் தேசத்தில்
மலர்ந்தாடும் செங்காந்தள் பூவே!

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா