யாப்பை மீறினால் மஹிந்த அணி மீது நடவடிக்கை!

தேர்தல் நடவடிக்கைகளின்போது சுதந்திரக் கட்சியின் யாப்பை மீறிச் செயற்பட்டால் மஹிந்த ஆதரவு அணி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று (05) தெரிவித்தார்.

இதற்காக மஹிந்த அணியின் அனைத்து தரப்புக்களையும் சேர்ந்த உறுப்பினர்களதும் தேர்தல் செயற்பாடுகள் மற்றும் பிரசாரங்கள் கண்காணிக்கப்படவுள்ளன. இது அவர்களுக்கான ​சோதனைக் காலம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (05) பிற்பகல் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். மஹிந்த ஆதரவு அணி எமக்கு வேண்டும். அதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்வதற்கான ஆகக்கூடிய முயற்சிகளை கட்சித் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார்.

அதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வந்து இணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறானாலும் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற பின்னர் இப்போது கட்சிக்கு துரோகம் இழைக்க நினைப்பது கட்சி யாப்பை மீறும் செயலாகும். இதற்கு ஒருபோதும் இடமளிக்க  முடியாது. எனவே இத்தேர்தல் காலத்தில் நாம் மஹிந்த ஆதரவு அணியின் செயற்பாடுகளை கண்காணிக்கவுள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது அனைத்து மட்ட ஆதரவாளர்களையும் நாம் கண்காணிப்போம். அவர்கள் நடத்தும் பிரசாரக் கூட்டங்களுக்கு எமக்கு விசுவாசமானவர்களை அனுப்பி கண்காணிப்போம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் இன்னுமொரு கட்சியின் வெற்றிக்காக உழைப்பார்களாயின் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

இவ்வாறானவர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு பின்னர் கூடி ஆராயும்.

மஹிந்த அணி முன்வைத்துள்ள ஒப்பந்தம் அடிப்படையில் நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவில்லை. இந்த அரசாங்கத்தில் நாமும் ஒரு பங்குதாரராகவுள்ளோம்.

அதற்காக ஐ.தே.க கூறும் அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்பவர்கள் அல்லர் என்பதனை மஹிந்த அணி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.