ஒவ்வொரு தடைக்கும் அணு ஆயுத சோதனையை அதிகரிக்கும்!

ஐ.நா சபை விதிக்கும் பொருளாதார தடைகள் அனைத்தும் தங்களது அணு ஆயுத சோதனைகளை அதிகரிக்கும் என வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.

இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றியது.

வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.

அமெரிக்காவின் இந்த தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. ஏற்கனவே, பலமுறை வடகொரியாவுக்கு எதிராக பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா மேற்கொண்டது. ஜப்பான் தீவுகளுக்கு மேலாக இந்த ஏவுகணை பறந்ததாகவும் செய்திகள் வெளியானது.

இதற்கிடையே, வடகொரியா உடனான பிரச்சனைக்கு போர் தான் தீர்வு என்றால் அதையும் மேற்கொள்வோம் என அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று அந்நாட்டு அரசு ஊடகத்தில் வெளியானது. அதில், “வடகொரிய அரசு மீது பொருளாதார தடைகள் மற்றும் அழுத்தங்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கொடுப்பதால், அணுசக்தி அணுகு முறையின் இறுதிமுடிவு வேகமாக அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா சபை கூட்டத்தில் வடகொரிய பிரதிநிதி இந்த வார இறுதியில் உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.