சென்னையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனை!

கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச் சேர்ந்த ஷோபா ஜான் என்ற பெண், ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 26 வழக்குகளில் முதல் குற்றவாளி. இப்போதுதான் முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கேரள அரசு அவரை ஓராண்டு சிறையில் அடைத்திருக்கிறது. கேரளாவில் பெண் ஒருவர் முதல்முறை குண்டாஸில் சிறைக்குப் போன வரலாற்றுச் சாதனையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளை ஏமாற்றி பாலியல் குற்றத்தில் தள்ளிவிடுவார் என்பதே ஷோபாஜான் மீதான குற்றச்சாட்டு. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் இதில் ஷோபாஜானுக்கு உடந்தையாக இருந்துள்ளார். ஷோபா ஜானுக்கு 18 ஆண்டுகளும் ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கேரள கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் ஷோபாஜான்

சென்னையைப் பொறுத்தவரை குற்றங்களே பயப்படும் அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்தவர் தாதா கிருஷ்ணவேணி ”குண்டர் சட்டத்தில் எத்தனை தடவை உள்ளே போனாங்கன்னு தெரியலே ஆனால், 10 தடவைக்கு மேலே இருக்கும்” என்று யோசித்துச் சொல்கிறார்கள் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட போலீஸார். சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதியில் போதை ஆசாமிகளுக்கும் போலீஸுக்கும் நன்கு அறிமுகமான பெயர் கிருஷ்ணவேணி. ‘பொட்டலம் கிச்சாக்கா’ என்பது கிருஷ்ணவேணியின் ‘நிக்’ நேம் என்கிறார்கள், ஏரியாவாசிகள். 80 வயதான கிருஷ்ணவேணி, இன்று வரையில் கொஞ்சமும் சலிப்பில்லாமல் தன்னுடைய தொழிலை செய்து வருகிறார். தொழில் வாரிசாகப் பலரைக் குடும்பத்தில் உருவாக்கியிருந்தும், இதுவரையில் குடும்பத்தார் யாரும் சிறை வாழ்க்கையை அனுபவித்ததில்லை என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

கிருஷ்ணவேணி (2008-ல் எடுத்தபடம்)குண்டர்தடுப்புக் காவல் சட்டம் கொண்டுவரப்பட்ட (1984) ஆண்டே ‘குண்டாஸ்’ சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டவர் இந்த கிருஷ்ணவேணி. இன்றும் டி.பி.சத்திரம், மங்காதோட்டம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, பேசின்பாலம் போன்ற பகுதிகளில் இன்றளவும் கஞ்சாப் புகையின் நெடி அப்படியேதான் காற்றில் கலந்து இருக்கிறது. இன்னும் கிருஷ்ணவேணிகள் மாறவில்லை, கஞ்சா விற்பனையும் குறையவில்லை, வாங்கும் ஆட்களும் குறையவில்லை. போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆசாமிகளால், சிறு சிறு திருட்டுகள் மிக சாதாரணமாக நடக்கிறது. குறிப்பிட்ட இந்தப் பகுதிகளுக்கு இப்போதையத் தேவை, முழுமையான ஒரு கவுன்சலிங் மட்டுமே… அதுதான் மாற்றத்துக்கு ஒரே வழி! அதைத்தான் அரசும் காவல்துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.