வாள்வெட்டு தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாமாம்-அதிரடிப் படை!
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், வாள் வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாமென்றும் விசேட அதிரடிப் படையின் வடமாகாண உயர் அதிகாரி இன்று தெரிவித்தார்.

யாழ்.பண்ணையில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் இன்று(20) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.குறிப்பிட்ட சிலரே இவ்வாறான வாள் வெட்டுச் சம்பவங்களை செய்கின்றார்கள்.

இவ்வாறானர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமென்றும், தங்களின் பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தெரிந்தால், யாழ்.பண்ணையில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமிற்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.அதேவேளை, இவ்வாறான தகவல்களை அறிவிப்பதற்கு அவசர அழைப்பு இலக்கம் ஒன்றினை மிக விரைவில் அமைக்கவுள்ளதாகவும், அந்த இலக்கத்தின் மூலம் அறிவிக்க முடியுமென்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*