நுவரெலியா பிரதான வீதியில் விபத்து மாணவன் காயம்!

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகில், இன்று பகல் இடம்பெற்ற விபத்தில், பாடசாலை மாணவரொருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த  தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் சுவிஷன் (வயது  11)  என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி மாணவன், வீதியை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளானது, நுவரெலியாவிலிருந்து வந்த தனியார் சொகுசு வாகனத்தை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டபோது, மேற்படி மாணவன் மீது மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும்  பாடசாலைக்கு அருகே பாதசாரி கடவைகள் இன்மையாலும் வேகத்தடைகள் ஏற்படுத்தப்படாமையாலும் மாணவர்கள் மற்றும் பாதசாரிகளின்  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நகர சபைக்கு, பல தடவைகள் அறிவித்துள்ள போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*