ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கிக்கிடக்கின்றனர்!

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கிக் கிடப்பதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அனுபவசாலிகள் என்றும் வயதில் மூத்தவர்கள் என்றும் பெருமித்துக் கொள்கின்ற ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கினால் இன்று ஒற்றுமையாக இருந்த கட்சிகள் சிதறுண்டு போயுள்ளன. அதனால் அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டலாம். ஆனால் பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களே. இந் நிலையில் இருந்து மீண்டெழுந்து தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா?

அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது என்ன?

என ஊடகவியலாளர்கள்  முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வெறும் சுயநலக் காரணங்களுக்காக மட்டும் பெரும்பான்மை மக்கள் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயக்கம் அடைந்துள்ளார்கள் அவர்கள் என்று கூற என் மனம் விடவில்லை.உண்மையில் ‘நம்பினார் கெடுவதில்லை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மைத் தலைவர்களை அவர்கள் நம்பி வருகின்றார்கள் என்று கூடக் கூறலாம். ஆனால் அவர்களின் செயலில் எனக்கிருக்கும் ஆதங்கம் வேறு. ‘தருவதைத் தாருங்கள்’ அல்லது ‘தருவதைப் பெறுவோம்’ என்று கூறுவது ஒன்று.

‘தந்ததுடன் நாங்கள் திருப் தி அடைகின்றோம்’ என்று கூறுவது வேறு. எங்கே எமது தலைமைத்துவங்கள் குறைந்ததையேற்று எமது வருங்காலத்தை குறைபாடுடையதாக ஆக்கிவிடுவார்களோ என்றே அஞ்சுகின்றேன். அரசாங்கம் தருவதைத் தருவது அவர்கள் இஷ்டம். ஆனால் எமது வாழ்வுரிமை, வரலாற்றுரிமை, வள உரிமை வேறு. அதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. விட்டுக்கொடுத்தால் வட கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இனத்தவரைப் பெரும்பான்மையாகப் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு 25 வருடங்கள் தேவையில்லை.

இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரியாமல் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று ஆக்ரோஷமாக அடித்துப்பேச முற்பட்டோமானால் எமது அழிவு வெகு தூரத்தில் இல்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மையினரை இளைய சகோதரர்களாகப் பார்ப்பார்கள், பண்புடன் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே ஆங்கிலேயர்கள் எமது முதல் அரசியல் யாப்பை எமக்குத் தந்துதவிடச் சென்றார்கள்.

ஆனால் அப்போதைய பெரும்பான்மை இனத் தலைவர்களிடம் உள்ளொன்றும் புறமொன்றும் இருந்ததை ஆங்கிலேயர்கள் அறிந்திருக்கவில்லை. ஏன் எமது தமிழ்த் தலைவர்கள் கூட அப்போது புரிந்திருக்கவில்லை. புகழ்ச்சிக்கு மயங்கிவிட்டார்கள் அவர்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.

உதாரணத்திற்கு விண்ணாதி விண்ணனான பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் கூட டி.எஸ்.சேனாநாயக்கவின் பசப்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்பட்டு விட்டார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. ‘சிங்களவர் மட்டும்’ அமைச்சரவையை ஏற்படுத்திக் கொடுத்தது அவரே.

அதனால்தான் இன்று நாம் நேரடியான எதிரிகளை வரவேற்கின்றோம். சேர்ந்திருந்து குழி தோண்டும் எமது நண்பர்கள் மீது விழிப்பாய் இருக்கின்றோம். சூடுபட்ட பூனை அடுப்பங்கரை ஏறாது! எமது நாட்டின் ஆங்கிலேய ஆளுநர் நாயகமாகத் திகழ்ந்த சோல்பரிப் பிரபு தமது நண்பரிடம் என்பவரிடம் தாங்கள் கொடுத்த அரசியல் யாப்பு தோல்வியுற்றது என்று கூறி 1958ஆம் ஆண்டில் நடந்தவற்றைப் பார்க்கும் போது இலங்கைக்கு ஒரு சமஷ்டி ரீதியான அரசியல் யாப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியுள்ளது என்று கருத்துத் தெரிவித்தாராம்.

இவ்வாறான சிறுபான்மையோரை முடக்கும் அரசியலானது சிறுபான்மை மனோநிலை கொண்ட பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களால் அரங்கேற்றப்பட்டதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏதோ காரணத்தினால் அப்போதைய சிங்களத் தலைவர்கள் தென்னிந்திய தமிழர்களையும் சேர்த்துக் கூட்டி சிங்களவர் உலகில் ஒரு சிறுபான்மையினமே என்றும் தம்மைப் பாதுகாத்தல் அவசியம் என்ற எண்ணத்திலும் தமிழ் மக்களை வதைத்து, வருத்தி, வாழவிடாது செய்யத் துணிந்தார்கள்.

நீங்கள் கூறும் தமிழ்த் தலைமைகள் ஒரு வேளை அதைப் புரிந்து கொள்ளாது நடக்கின்றார்களோ நான் அறியேன். இதை உணர்ந்தே எம் சகோதரர்கள் மக்கள் பாற்பட்ட, மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.அதாவது மக்களின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் எங்கே மக்கள் மனம் அறியாமல் எமது மாண்பை மலினப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் பலர் மனதிலும் இப்பொழுது எழுந்துள்ளது.

ஆனால் கட்சிகள் சிதறுண்டமையின் காரணம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். காரணங்களை இவைதான் என்று மிக எளிமையாகச் சுட்டிக்காட்ட முடியாது.அது எமக்குத் தேவையுமில்லை. ஏன் என்றால் நீங்கள் கூறுவது போல அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டிய நிலைமையே இன்று பரிணமித்துள்ளது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் தருவதாகக் கூறியவற்றை பெரும்பான்மையினம் தருவதாக இல்லை. 2016ல் தரப்படுவன என்று எதிர்பார்த்த எமது கனவான் நெஞ்சங்கள் கருகியுள்ளன.இன்று கனன்று கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நடக்க வேண்டியது என்ன என்று கேட்டு உங்கள் கேள்வியே பதிலைத் தந்துள்ளது. மக்கள் போராட்டமே அது. மக்கள் போராட்டத்திற்கு சில அடிப்படைகள் தேவையாகவுள்ளன.

எமது போராட்டம் நாம் மனமுவந்து போராடும் ஒன்றாக இருக்க வேண்டும். போராட்டத்துக்கான காரணம் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். வெறுப்பு, கோபம், ஆத்திரம் ஆகியவற்றைக் களைந்திருக்கத் தெரிய வேண்டும்.வெறும் பொருளாதார நன்மைகள் பெறப்பட்டால் நாம் போராட்டத்தை கைவிட்டுவிடுவோம் என்று இருக்கக்கூடாது. கேப்பாப்புலவு மக்களைப் பாருங்கள். தொடர்ந்து போராடி வருகின்றார்கள். தாம் அடையவேண்டிய வாழ்வுரிமை இலக்கை எட்ட அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருந்து வருவதே இதற்குக் காரணம்.

எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்கமாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே உசிதம். நாம் கேட்பவை கிடையாது. ஆகவே தருவதை ஏற்போம் என்று கூறுவது தர்மம் ஆகாது. நாம் போராடுவது ஒரு தார்மீக உரிமைக்காக. நியாயமற்ற காரணங்களுக்காக அல்ல. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் எங்களிடம் திருப்பித் தருமாறு கேட்பது தவறானதொரு கோரிக்கையாகாது.

ஆகவே ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை. உலகில் வாழும் சகல தமிழ்ப்பேசும் மக்களும் எமக்கு இது சம்பந்தமாக உதவி அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*